புதுக்கோட்டை: பொற்பனைக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வில் ஆறு இதழ் கொண்ட தங்க மூக்குத்தி தோடு, எலும்பு முனை கருவி, வட்ட வடிவ சிவப்பு நிறமுடைய சூது பவள மணி ஒன்றும் கிடைத்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வேப்பங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பொற்பனைக்கோட்டை என்ற இடத்தில் அகழாய்வு செய்வதற்கு திறந்த நிலை பல்கலைக்கழகத்திற்கு மத்திய அரசின் தொல்லியல் ஆய்வுத் துறை அனுமதி வழங்கியது.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு நடைபெற்று வருகிறது. தொலைநிலை உணர்திறன் முறையான கண்டறிதல் மற்றும் வரம்பு மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் 44.88 ஏக்கர் பரப்பளவு கொண்ட பொற்பனைக்கோட்டையில் 3.11 ஏக்கர் பரப்பளவில் வாழ்விடம் இருந்தது கண்டறியப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் மனிதவள மேலாண்மை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பொற்பனைக்கோட்டையில் அகழாய்வுப் பணியினை கடந்த மே 20ஆம் தேதி தொடங்கி வைத்தார். அகழாய்வுப் பணி தொடங்கிய சில நாட்களிலேயே ஒரு செங்கல் கட்டுமானம் வெளிப்பட்டது.
பொற்பனைகோட்டையில் நடைபெற்று வரும் இந்த அகல ஆராய்ச்சியில் இதுவரை வட்டச் சில்லுகள், கண்ணாடி வளையல்கள், கண்ணாடி மணிகள், சுடுமண் விளக்கு, தகளிகள் சூது, பவள மணி உள்ளிட்ட 159 தொல்பொருட்களும் கீறல் குறியீடு கிடைத்துள்ளன. மேலும், இந்த அகழ்வாயில் மெருகேற்றப்பட்ட பீங்கான் பானை, ஓடுகள், கருப்பு நிற பானை ஓடுகள், சிவப்பு நிற பானை ஓடுகள், கூரை ஓடுகள், துளையிடப்பட்ட பானை ஓடுகள் என பல்வேறு வகையான பானை ஓடுகளும் கிடைத்துள்ளன.