புதுக்கோட்டை :புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் விஜயபாஸ்கர் தனது இரண்டு மகள்கள் ரிதன்யா பிரியதர்ஷினி, அனன்யா ஆகியோருடன் இணைந்து கீழ பலுவஞ்சி, மேலப் பழுவஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
பரப்புரையின்போது பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், "நகை கடன், மகளிர் சுய உதவி குழுக் கடன், விவசாயக் கடன் ஆகியவற்றை தள்ளுபடி செய்துள்ள ஒரே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே. கடந்த முறை நகைக் கடன் தள்ளுபடி என பொய்யான வாக்குறுதி அளித்தவர்களிடத்தில் நீங்கள் ஏமாந்தீர்கள்.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக எடப்பாடி மீண்டும் பொறுப்பேற்ற பிறகு ஒரு வீட்டிற்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர் இலவசம், ஒரு வீட்டிற்கு ஆயிரத்து 500 ரூபாய் மாதந்தோறும் பணம் ஆகியவற்றை அளிக்கப் போகும் அரசு, நம்முடைய அதிமுக அரசு மட்டுமே. மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சராக ஓ. பன்னீர்செல்வமும் வருவதற்கு நீங்கள் துணை நிற்க வேண்டும். மக்களாகிய நீங்கள்தான் என்னைத் தேர்தலில் நிற்கச் சொன்னீர்கள். அதனால்தான் நான் வேட்பாளராக போட்டியிடுகிறேன். உங்களுக்காக நான் இருக்கிறேன்.