அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் ஜல்லிக்கட்டு காளை கருப்பு கொம்பன் மறைவு, அவரது குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது புதுக்கோட்டை:அதிமுக முன்னாள் அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான சி.விஜயபாஸ்கர், ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பிலும் ஆர்வம் உடையவர். விராலிமலை சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட இலுப்பூர் சௌராஷ்ட்ரா தெருவில் வசித்து வரும் இவர், தனக்கு சொந்தமான இலுப்பூர் அருகே உள்ள ஓலைமான் பட்டி தோட்டத்தில் வைத்து கொம்பன், சின்னக் கொம்பன், வெள்ளைக் கொம்பன் மற்றும் கருப்புக் கொம்பன் ஆகிய காளைகளை வளர்த்து வந்தார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது தொகுதியான விராலிமலையில், கின்னஸ் சாதனை முயற்சியாக ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தினார். அப்போது வரை எந்த ஜல்லிக்கட்டிலும் தரப்படாத பரிசுகளான கார், புல்லெட், மோட்டார் சைக்கிள் என பல்வேறு பரிசுகளை சிறந்த காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் வழங்கினார். அதேநேரம், இவரது காளைகள் ஜல்லிக்கட்டில் பிடிபடாத காளைகளாக பெயர் எடுத்து வருகின்றன.
இந்த நிலையில், சுமார் 300 முறைக்கு மேல் களம் கண்ட, எங்கும் பிடிபடாத காளை என்ற பெயர் எடுத்த கருப்பு கொம்பன், புதுக்கோட்டை மாவட்டம் வடசேரி பட்டியில் கடந்த 2ஆம் தேதி நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றது. அப்போது, வாடிவாசலில் இருந்து ஆக்ரோஷமாக வெளியேறிய கருப்பு கொம்பன், எதிர்பாராத விதமாக வாடிவாசல் முன் வலது புறம் இருந்த தடுப்புக் கட்டையில் முட்டி தலையில் காயம் அடைந்து கீழே மயங்கி விழந்துள்ளது.
இதில் தலையின் உட்புறம் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 2 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த கருப்பு கொம்பன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
பின்னர், இது குறித்து தகவல் அறிந்த விஜயபாஸ்கர் சென்னையில் இருந்து உடனடியாக விமானம் மூலம் திருச்சி வந்தார். தொடர்ந்து ஓலைமான் பட்டி தோட்டத்தில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், பொதுமக்கள் பார்வைக்காக கருப்பு கொம்பன் காளை வைக்கப்பட்டது. மேலும், கொம்பன் காளை (விஜயபாஸ்கர் வளர்த்து உயிரிழந்த மற்றொரு காளை) நினைவிடம் அருகேயே குழி தோண்டபட்டு கருப்பு கொம்பன் காளையும் அடக்கம் செய்யப்பட்டது.
இதில் நூற்றுக்கணக்கான ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், காளை உரிமையாளர்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் ஆகியோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். முன்னதாக, விஜயபாஸ்கர் வளர்த்து வந்த கொம்பன் காளை கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தென்னலூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று, இதே போன்று வாடிவாசலில் இருந்து வெளிவரும்போது தடுப்புக் கட்டையில் முட்டி, தலையில் பலத்த காயம் அடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:முத்தப்புடையான்பட்டி ஜல்லிக்கட்டு - காளை காயம்.. பாசத்தில் கதறி அழுத உரிமையாளர்!