ஆய்வுக்குச் சென்ற இடத்தில் முதலுதவி சிகிச்சை அளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் புதுக்கோட்டை:அதிமுகமுன்னாள் அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான, சி.விஜயபாஸ்கர் அடிக்கடி தனது தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் காலை நேரம் சைக்கிளில் பயணம் செய்து பொதுமக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டு நிறைவேற்றி வருவது வழக்கம்.
அதன் ஒரு பகுதியாக, விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பரம்பூரில் நேற்றைய முன்தினம் ( நவ.13) காலை சைக்கிளில் பயணம் மேற்கொண்டு கிராமத்தில் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் எவ்வாறு உள்ளது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது பரம்பூர் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்திலும் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ளும் போது பரம்பூருக்கு அருகே உள்ள கிராமத்திலிருந்து சாலை விபத்து காரணமாகப் பலத்த காயமடைந்த நபர் சிகிச்சைக்காக ஆரம்பச் சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால், ஆரம்பச் சுகாதார நிலையத்தில் காயமடைந்த நபருக்குச் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் சிகிச்சை அளிக்க முடியவில்லை. காயமடைந்த நபர் வலியால் துடித்து கொண்டிருந்தார். இதைப்பார்த்த முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தானும் மருத்துவர் என்பதை அறிந்து காயமடைந்த நபருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காகப் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இது குறித்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், “இதுபோன்று பல்வேறு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் சரிவர வேலைக்கு வருவதும் இல்லை. அதேபோல் பல்வேறு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இல்லாமல் இருப்பதால் இது போன்று சாலை விபத்தில் காயம் அடைந்தவருக்குச் சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
சாலை விபத்தில் காயமடைந்தவருக்கு நேரில் சென்று சிகிச்சை அளித்து அவரது உயிரைக் காப்பாற்றிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டியும், மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்தனர். இந்நிலையில் விபத்தில் காயமடைந்தவருக்கு, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க:குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு!