புதுக்கோட்டை : துடையூரில் ஆளில்லா ரயில்வே கேட் உள்ளது. இந்த ரயில்வே கேட்டை மக்கள் கடந்து செல்வதற்கு ரயில்வே நிர்வாகம் சுரங்க பாதை அமைத்துள்ளது. இந்நிலையில், மழை பெய்யும் நேரங்களில் இங்கு அதிக அளவில் தண்ணீர் தேங்கும் சூழல் உள்ளது.
இதனால் மக்கள் ரயில்வே சுரங்கப்பாதையில் அப்போது செல்ல முடிவதில்லை. இதையடுத்து, அப்பகுதி மக்கள் சுரங்கப்பாதை அகற்றி மாற்றுப் பாதை அமைக்க வேண்டும் என்று பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்
மழை நீரில் மூழ்கிய கார்
கடந்த சில தினங்களாக புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக சுரங்கப்பாதையில் வழக்கம் போல் மழைநீர் அதிக அளவில் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது.
இந்நிலையில், ஓசூரில் அரசு மருத்துவராகப் பணியாற்றும் அந்த ஊரைச் சேர்ந்த மருத்துவர் சத்யா, அவருடைய மாமியார் ஜெயம் ஆகியோர் காரில் சொந்த ஊரான தொடையூர் கிராமத்திற்கு வந்தனர்.
அப்போது, அவர்கள் ரயில்வே சுரங்க பாதையை கடக்க முயன்ற போது அதிக அளவு தேங்கியிருந்த மழை நீரில் கார் மூழ்கியது. காரை எடுக்க முயன்றும் அவர்களால் முடியவில்லை. இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இருவரும் காரிலேயே மயங்கினர்.
மருத்துவர் உயிரிழப்பு
இதைனையறிந்த அப்பகுதி மக்கள் காரை உடைத்து இருவரையும் மீட்டனர். இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், காரை ஓட்டி வந்த மருத்துவர் சத்யா சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். அவருடைய மாமியார் ஜெயா உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையடுத்து ரயில்வே நிர்வாகம், மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டையில் பெண் மருத்துவர் பலி தொடர்ந்து அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதுகுறித்து வெல்லனூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : ராசிபுரம் அருகே காணமால்போன நீட் தேர்வு எழுதிய மாணவி