புதுக்கோட்டை:அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக்கோரியும், விலைவாசி உயர்வு காரணமாக திமுக ஆட்சியைக் கண்டித்தும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமை வகித்தார்.
மேலும் ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், "தவறு செய்த அமைச்சரை அமைச்சரவையிலிருந்து நீக்காமல் அவருக்கு முட்டுக் கொடுக்கும் வேலையை திமுக செய்து வருகிறது. மக்கள் மத்தியில் திமுகவிற்கு மிகப்பெரிய கெட்டப்பெயர் வந்துவிட்டது. பொதுமக்கள் மட்டுமல்லாமல் திமுகவினரே இந்த ஆட்சி எப்போது போகும் என்று கூறும் அளவிற்கு மக்கள் மத்தியில் வெறுப்பு உருவாகி, திமுக ஆட்சி மீது வந்துவிட்டது.
விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத்திற்கும் தேர்தல் வைத்தாலும் அல்லது எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வைத்தாலும் கண்டிப்பாக அதிமுக ஆட்சிக்கு வரும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமே இரட்டை இலை பட்டன் உடையும் அளவிற்கு பொதுமக்கள் இரட்டை இலைக்கு வாக்களிக்க தயாராகிவிட்டனர். அதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது" என்று பேசினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், "ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகாவது திராவிட முன்னேற்றக் கழக அரசு தவறு செய்தவர்களுக்கு துணை நிற்கின்ற போக்கை கைவிட வேண்டும். செந்தில் பாலாஜியை அமைச்சரவையை விட்டு நீக்கினாலோ அல்லது அவர் ராஜினாமா செய்தாலோ தான் இந்த பிரச்னை முடிவுக்கு வரும். அதன் பிறகு மக்கள் பிரச்னையில் திமுக அரசு கவனம் செலுத்த வேண்டும். தற்போது அரசுப் பணிகள் முடங்கியுள்ளன.
சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 15 மாத காலத்தில் மிகப்பெரிய மருத்துவமனை நாங்கள் கட்டியிருக்கிறோம். இது எங்களது மிகப்பெரிய சாதனை என்று கூறுகிறார். ஆனால் அந்த மருத்துவமனைக்கு என்று ஒரு மருத்துவர் கூட இதுவரை நியமனம் செய்யப்படவில்லை. ஓமாந்தூரார் மருத்துவமனையில் இருந்து மருத்துவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது சாதனையா? ஆனால், அதிமுக ஆட்சிக் காலத்தில் 11 மாதத்தில் 350 கோடி ரூபாய் மதிப்பில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டி திறப்பு விழாவும் நாங்கள் கண்டோம்.
அதேபோன்று கடந்த அதிமுக ஆட்சிக் காலத்திலேயே 63 கோடி மதிப்பில் புதுக்கோட்டையில் தமிழ்நாட்டில் 2-வது பல் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், இரண்டு ஆண்டுகள் காலம் ஆகியும் இதுவரை பணிகள் முடிக்கப்படாமல் உள்ளது. இந்தாண்டு 50 மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்று கூறியுள்ளனர், இருப்பினும் பணிகள் இன்னமும் முடியவில்லை. கள நிலவரத்தை தமிழ்நாடு அரசு உணர்ந்து செயல்பட வேண்டும்.