புதுக்கோட்டை மாவட்டம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த 27 வயதான தனலெட்சுமி என்பவர் வயதான தாய், தந்தையருடன், காது கேட்க முடியாத ஒரு சகோதரி, காது கேட்காத மற்றும் வாய்ப் பேச முடியாத மூன்று சகோதரிகள், அதேபோல காது மற்றும் வாய்ப் பேச முடியாத இரண்டு சகோதரர்களுடன் வசித்துவருகிறார். குடும்பத்தில் தன்னுடன் பிறந்த அனைவரும் குறைபாடுகளுடன் பிறந்துள்ள நிலையில், அனைவரையும் கரை சேர்க்கும் பொறுப்பை சுமந்து, வேறு வேலை எதுவும் கிடைக்காமல் வீட்டு வேலை செய்து மாதத்திற்கு இரண்டாயிரம் ரூபாய் வருமானத்தில் குடும்பத்தை நடத்திவந்தார்.
சிறிய குடிசை வீட்டிற்குள் வாழ்க்கையை நடத்தி வந்த இவர்கள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட கஜா புயலின் போது, வறுமையின் விளிம்பிற்கே தள்ளப்பட்டனர். இதையடுத்து, கஜா புயலினால் பாதிக்கப்பட்டவர்களிடம் ஈடிவி பாரத் நேரடியாக சென்று செய்தி சேகரித்து வெளியிட்டுவந்தது. அப்போது, வறுமையின் பிடியில் சிக்குண்டிருந்த தனலெட்சுமியை சந்தித்து செய்தி சேகரித்து வெளியிட்டது ஈடிவி. அதன் பலனாக, அவரின் குடும்பத்திற்கு தேவையான உணவு பொருள்கள் கிடைத்தன.
தற்போது நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கரோனா வைரஸ் தொற்றினைக் கட்டுப்படுத்தும் வகையில் அமல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்கள் குறித்து ஈடிவி களப்பணியாற்றிவருகிறது.
இந்த ஊரடங்கில், தனலெட்சுமியின் குடும்பத்தினரை சந்தித்த ஈடிவி பாரத் அவர்களது கஷ்டங்களைப் பதிவு செய்து வெளியிட்டது. இந்தச் செய்தி மாவட்டம் முழுவதும் சென்றடைந்து, பல்வேறு அமைப்பினரும் அக்குடும்பத்திற்கு நிவாரண பொருள்கள் மற்றும் உணவுப் பொருள்களை வழங்கினர். புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் ஜீவா சுப்பிரமணியன் அம்மா உணவகத்தில் இருந்து இவரது குடும்பத்தினருக்கு மூன்று வேளை உணவு வழங்கவும் ஏற்பாடு செய்தார்.