புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சேர்ந்த துரை குணா, கடந்த மாதம் அரசு அதிகாரிகளுக்கு சட்ட வகுப்பு எடுக்கப்போவதாக போஸ்டர் ஒட்டி பரபரப்பை கிளப்பினார். தற்போது புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு இரண்டு பாக்கெட் தோசை மாவு அவார்டு வழங்குவதாக போஸ்டர் ஒட்டி மேலும் பரபரப்பாக்கியுள்ளார்.
கறம்பக்குடி-புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வழிபாட்டுத்தலம், கட்டுமானங்களை அகற்றக்கோரி வழக்குத் தொடர்ந்து அதில் வெற்றி பெற்று ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணை பெற்றார் துரை குணா. இந்நிலையில், நீதிமன்றம் ஆணையிட்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் இருக்கும் அதிகாரிகளை கண்டித்து, அவர்களுக்கு அவார்டு வழங்கப்போவதாக நகரின் முக்கியப் பகுதிகள் மற்றும் பொதுக் கழிப்பிடங்களில் போஸ்டர் ஒட்டியுள்ளார்.
அந்த போஸ்டரில் “ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் மாண்புமிகு நீதியரசர்கள் பிறப்பித்த உத்தரவு வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்தாத துணிச்சல் மிக்க அதிகாரிகளை பாராட்டி கெளரவிக்கும் விதமாக, குட்கா அமைச்சரின் ஸ்லீப்பர் செல் விருது மாவட்ட ஆட்சித் தலைவருக்கு ’இரண்டு பாக்கெட் தோசைமாவு’ அவார்டு, எடப்பாடியார் விருது ’பருப்பு கடையும் மத்து’ நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளருக்கும், தர்மயுத்தம் பன்னீர் விருது ’சிட்டுக்குருவி லேகியம்’ உதவி கோட்டப் பொறியாளருக்கும் வழங்கப்படுகிறது.