புதுக்கோட்டை: நகராட்சி பகுதிகளில் மழைநீர் செல்லும் வரத்து வாய்க்கால்கள் மற்றும் தாழ்வான பகுதிகளை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி இன்று(டிச.3) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் மழை எச்சரிக்கையை தொடர்ந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று(டிச.3) புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள 42 வார்டுகளிலும் மழைநீர், வாய்க்கால்கள் வழியாக செல்லும் வகையில் நகராட்சி நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
அதன்படி புதுக்கோட்டை நகராட்சி புதிய பேருந்துநிலையம் அருகில் உள்ள வாய்க்கால், பெரியார் நகர், கம்பன் நகர், வரத்து வாய்க்கால்கள், சந்திரமதி கால்வாய், காட்டுப்புதுக்குளம் வரத்து வாரி போன்ற பல்வேறு பகுதிகளில் மழைநீர் செல்லும் வாய்க்கால்கள், தாழ்வான பகுதிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
மேலும் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடலோர பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட பாதுகாப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதில் தற்பொழுது மழை காரணமாக சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கியுள்ளனர். இவர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டு அலுவலர்கள் மூலம் பொதுப்பணித்துறை கண்காணிக்கப்பட்டுவருகிறது.