தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதுக்கோட்டையில் பாறைக் கல்வெட்டுகள் கண்டெடுப்பு - rock inscriptions

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே கி.பி. 9ஆம் நூற்றாண்டு, கி.பி. 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாறைக் கல்வெட்டுகளை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

புதுக்கோட்டையில் பாறைக் கல்வெட்டுகள், ancient rock inscriptions discovered at Pudukkottai
ancient rock inscriptions discovered at Pudukkottai

By

Published : Nov 25, 2021, 9:18 AM IST

புதுக்கோட்டை:கீரனூர் அருகே வத்தனாக்குறிச்சி கிராமத்தில் ஆசிரியர் கண்ணதாசன் கொடுத்த தகவலின் அடிப்படையில், மதுரை பாண்டியநாட்டு பண்பாட்டு மையத்தின் வரலாற்றுத் துறை பேராசிரியர்கள் முனைவர் து. முனீஸ்வரன், முனைவர் சி. செல்லபாண்டியன் ஆகியோரின் தலைமையில், கீரனூரைச் சேர்ந்த, பாண்டியநாட்டு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர்கள் குழு கள ஆய்வுமேற்கொண்டது.

ஒரே பாறையின் மேற்பரப்பில் இரண்டு கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன. இக்கல்வெட்டுகளைப் படியெடுத்து ஆய்வு செய்தபோது அவை கி.பி. 9, கி.பி. 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று அறியப்பட்டன.

தொன்மையானது

இக்கல்வெட்டைப் படியெடுத்து, ஆய்வுசெய்த தொல்லியல் கள ஆய்வாளர்கள் கூறியதாவது, "தமிழரின் தொன்மையைப் பறைசாற்றுகின்ற, பொற்பனைக்கோட்டை முதல்கட்ட அகழாய்வில், பல வரலாற்றுத் தடயங்கள் கண்டறியப்பட்டு ஆய்வுசெய்யப்பட்டுவருகின்றன.

இந்நிலையில், கீரனூர் அருகே வத்தனாக்குறிச்சி கிராமத்தில், தனிப்பாறையில் இரண்டு அடி நீளம், இரண்டு அடி அகலம், ஐந்து வரிகள் கொண்ட ஒரு கல்வெட்டில் 'ஸ்ரீ இடைத்தி சாத்தங் குருன்தி சுனை இயிது அழியாதி' எனப் பொறிக்கப்பட்டுள்ளது.

சுனை குறித்த தகவல்கள்

இக்கல்வெட்டு கி.பி. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. கல்வெட்டின் செய்திப்படி, அப்பகுதியைச் சேர்ந்த மக்கள், கால்நடைகளின் நீர் ஆதாரத்திற்காக, சாத்தங் குருன்தி என்பவர் பாறையின் மேல் சுனையைக் குடைந்து, அச்சுனையை, மக்கள், கால்நடைகளுக்கு தண்ணீர் பயன்பாட்டிற்காக அளித்தமையைக் குறிக்கிறது. கல்வெட்டின், ஐந்தாம் வரி முற்றிலும் சிதிலமடைந்துள்ளது.

அகநானூற்றில் களிற்றியானை நிரையில் எட்டு இடங்களில் சுனைகள் பற்றிய செய்திகளில் உள்ளன. சுனைகள், வளத்தை உணர்த்துவதாகவும், வறுமையை உணர்த்துவதாகவும், பெரும்பாலான இடங்களில் கூறப்பட்டுள்ளது. இதன் அருகே காணப்படும் மற்றொரு கல்வெட்டு ஆறு அடி நீளம், நான்கு அடி அகலம் என எட்டு வரிகள் பொறிக்கப்பட்டுள்ளன.

இக்கல்வெட்டு கி.பி. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. பெரும்பாலான எழுத்துகள் சிதிலமடைந்துள்ளதால், கல்வெட்டின் பொருளை அறிந்துகொள்ள முடியவில்லை. இப்பாறைக் கல்வெட்டுகள், கிடைமட்டமாக பொறிக்கப்பட்டுள்ளதால், மக்கள், கால்நடைகள் நடமாட்டத்தால் எழுத்துகள் முற்றிலுமாக அழிந்துபோகும் நிலையில் உள்ளன.

முறையாகப் பாதுகாக்கப்பட வேண்டும்

மேலும், இப்பாறைக் கல்வெட்டுகளின், வடபுறம் இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட ஈமக் காடுகளும் உள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில், பல ஆண்டுகளுக்குப்பின் பாறைக்கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. சுனையை தானமாக அளித்த கல்வெட்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில், வேறெங்கும் கண்டெடுத்ததாக இதுவரை அறியப்படவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன், இக்கல்வெட்டின் அமைவிடம் தெரிந்து, படியெடுத்திருந்தால், பூலாங்குறிச்சி கல்வெட்டினைப்போல் அரிய செய்தி கிடைத்திருக்க வாய்ப்புண்டு. இப்பாறைக் கல்வெட்டுகளுக்கு, மேற்கூரை அமைத்து சிதிலமடையாமல் தடுத்து, தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவர வேண்டும் என்பதே, தொல்லியல் ஆய்வாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது" என்றனர்.

இதையும் படிங்க: வேதனையில் டெல்டா விவசாயிகள்: துயர் துடைக்குமா அரசு ?

ABOUT THE AUTHOR

...view details