தமிழ்நாட்டில் சிறுநீரகம் செயலிழந்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தத்தை சுத்திகரிப்பு செய்ய டயாலிஸிஸ் மருத்துவம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. குறிப்பாக சிறுநீரகம் பொருத்த முடியாத நோயாளிகள் வாரம் இருமுறை இந்த சிகிச்சை மேற்கொண்டே ஆகவேண்டும். ஒரு சிறுநீரக நோயாளிக்கு டயாலிஸிஸ் எந்திரத்தை கொண்டு சிகிச்சையளிக்க குறைந்தது மூன்று மணி நேரம் தேவைப்படுகிறது.
கரோனா காலத்தில் மருத்துவர்களுக்கு சவால் நிறைந்ததாகவே பார்க்கப்படுகிறது. அந்தவகையில் புதுக்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் வீட்டிலிருந்தே டயாலிஸிஸ் சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனர்.
புதுக்கோட்டை மச்சுவாடி பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார் (26). இவர் கடந்த 15ஆம் தேதி சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டயாலிசிஸ் செய்து வந்த மருத்துவர்கள் வீட்டிலேயே அவர் டயாலிசிஸ் செய்துகொள்ளும் விதமாக ஒரு மாற்று சிகிச்சை அளித்துள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூன்றாவது நாளே அவருக்கு மயக்க மருந்து மூலம் ஒரு சிறு சிகிச்சை செய்யப்பட்டது.
இதனையடுத்து, சிறுநீரக மருத்துவ நிபுணர் சரவணக்குமார், சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் லதா, மயக்கவியல் மருத்துவர்கள் சாய்பிரபா, பால சுப்ரமணியன் ஆகியோர் அடங்கிய குழு இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டது. இதில், இரண்டு குழாய்கள் பெரிட்டோனியம் என்று சொல்லப்படுகின்ற வயிற்றினுள் உள்ள உறைக்குள் வைக்கப்பட்டன. ஒரு குழாய் வழியாக சிறுநீரகம் போல் வேலை செய்யும் திரவங்கள் செலுத்தப்பட்டு ஆறு மணி நேரம் வயிற்றினுள் நிறுத்தப்படும்.