புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வெளியாத்தூர் கிராமத்தில் சுமார் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில் 20க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காய்ச்சல் தீவிரமாக பரவிய நிலையில், வெளியாத்தூர் கிராமத்தில் சுகாதாரத்துறை சார்பில் சுகாதரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுகாதாரப் பணியாளர்கள், ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றுவதுடன், தொற்றுநோய் பரவாத வகையில் பிளீச்சிங் பவுடர் உள்ளிட்ட மருந்துகளை தெளித்து வருகின்றனர்.
வேகமாக பரவிவரும் டெங்கு காய்ச்சல் இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறும்போது, எங்கள் குடியிருப்பில் ஏராளமானோருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. நோய் பரவுவதற்கு முன் அரசு அலுவலர்கள் யாரும் கிராமத்துக்கு வரவில்லை. தற்போது, காய்ச்சலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டவுடன், சுகாதாரம் இல்லை என்றுக்கூறி மருந்துகள் தெளிக்கிறார்கள். காய்ச்சல் யாருக்கும் பரவாமல் தடுக்க வரும்காலங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
இதுபற்றி சுகாதார பணியில் ஈடுபட்டு வரும் அலுவலர்கள் கூறுகையில், "இங்குள்ளவர்களுக்கு சாதாரண காய்ச்சல் தான் வந்திருக்கிறது. அதுவும் பொதுமக்களிடம் போதுமான விழிப்புணர்வு இல்லாதது தான் முக்கிய காரணம். குறிப்பாக, ஒவ்வொரு வீடுகளிலும் 3 முதல் 4 மூட்டை பிளாஸ்டிக் பொருட்கள், டயர் அட்டை என அனைத்தையும் அகற்றி சுத்தப்படுத்தி உள்ளோம். 4 நாட்களாக தொடர்ந்து மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. சுகாதாரப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. விரைவில் காய்ச்சல் கட்டுக்குள் கொண்டு வரப்படும்" என்றனர்.