அம்மோனியா வாயு கசிவு குறித்து 7 பேர் கொண்ட குழு ஆய்வு புதுக்கோட்டை: அறந்தாங்கியில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன், இன்று (டிச.27) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “எண்ணூர் கோரமண்டல் நிறுவனத்தில் நேற்று (டிச.27) கப்பலிலிருந்து அமோனியா வாயுவை பைப் மூலம் கொண்டு செல்லும் வழியில் கசிவு ஏற்பட்டது. உடனடியாக அந்த ஆலையின் நிர்வாகம் அமோனியா கசிவைக் கண்டுபிடித்து சரி செய்துள்ளது.
அந்த அமோனியா கசிவால், அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு லேசான கண் எரிச்சல், மூச்சுத் திணறல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டனர். இதில் சிறு பாதிப்புக்கு உள்ளான 18 பேர் ஸ்டான்லி உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, நலமுடன் உள்ளனர். பின்னர், இன்று (டிச.28) காலை மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, அமோனியா அளவைக் கணக்கிட்டபோது ஜீரோ அளவுதான் இருந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக கூடுதல் செயலாளர், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றுத்துறை செயலர் சுப்ரியா சாகு, தலைமையில், தமிழ்நாடு மாசுக்கட்டு வாரியச் செயலாளர் கண்ணன் உள்ளிட்ட 7 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்துள்ளார். இந்தக் குழு, அமோனியா கசிவு குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அமோனியா வாயு வெளியேறியது மிக முக்கியமான பிரச்னை. அடுத்த கட்டமாக, இந்த பிரச்னையை சரி செய்து சான்றிதழ்கள் பெற்ற பிறகுதான், ஆலை இயங்குவதற்கான சூழல் ஏற்படும். கப்பலில் இருந்த 12,500 டன் அமோனியா சேமிப்புக் கிடங்கில் -33 டிகிரி திரவமாக சேமிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கடந்த 2022ஆம் ஆண்டு பைப் லைன் பாதுகாப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் முறையான கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டதால், மிகப்பெரிய விபத்தைத் தடுத்துள்ளோம். மாதம் மாதம் துறை சார்ந்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நிறுவனத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.
வருங்காலத்தில் இது போன்ற விபத்துக்கள் நடக்காமல் இருக்க கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளை மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளைக் கொண்டு தீவிரப்படுத்தி உள்ளோம். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, மருத்துவக் குழுக்களை அமைத்து, அப்பகுதி மக்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பு ஏற்படுத்த அறிவுறுத்தியுள்ளார்.
அமோனியா கசிவால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்ற அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி உள்ளனர். துறை சார்ந்த அதிகாரிகள் இந்த ஆலையை மாதம், மாதம் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த ஆலை தொடங்குவதற்கான சிடிஓ தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வழங்கி உள்ளது. வருங்காலங்களில் இது போன்று நடைபெறாமல் இருக்க சிவப்பு பிரிவு தொழிற்சாலைகளை அடிக்கடி கண்காணித்து, அப்பகுதியின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய தனியாகக் குழு அமைத்து செயல்படுத்தப்படும்” எனக் கூறினார்.
இதையும் படிங்க:நாளைகோட்டை முற்றுகை போராட்டம் நடைபெறுவது உறுதி - ஜாக்டோ ஜியோ அமைப்பு