புதுக்கோட்டை:இறையூர் ஊராட்சிக்கு உட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மலம் கலந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர், மேலும் மத்திய மண்டல ஐஜி உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை முடிக்கி விடப்பட்டிருந்த நிலையில் வழக்கை தமிழக அரசு சிபிசிஐடி காவல்துறைக்கு மாற்றியது.
இந்நிலையில் கடந்த 105 நாட்களாக சிபிசிஐடி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் இதுவரை சிபிசிஐடி காவல்துறையினர் இறையூர், வேங்கைவயல், காவேரி நகர், கீழ முத்துக்காடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 147 நபர்களிடம் விசாரணை செய்து உள்ளனர்.
இதனிடையே தமிழக அரசு நீதிபதி சத்தியமூர்த்தி தலைமையில் இந்த வழக்கு சம்பந்தமாக ஒரு ஆணையத்தை அமைத்தது. இந்நிலையில் குடிநீர் தொட்டியில் சேகரிக்கப்பட்ட நீரினை ஆய்வுக்கு உட்படுத்தியதில் குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்டது மனித கழிவு என்பது உறுதியாகி உள்ளது. இதையடுத்து சிபிசிஐடி காவல்துறையினர் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு கூடுதல் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுவில் நாங்கள் கடந்த 105 தினங்களாக 147 பேரிடம் விசாரணை நடத்தியதாகவும், அதில் சந்தேகத்திற்குரிய 11 நபர்களிடம் மரபணு பரிசோதனை செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர். அந்த மனுவின் அடிப்படையில் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்புக் கூடுதல் நீதிமன்ற நீதிபதி சத்தியா உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.