புதுக்கோட்டை மாவட்டத்தில் மூக்கையா என்பவர் அரசு பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இவர் பேருந்து ஓட்டும்போது செல்போன் பேசிக்கொண்டே பேருந்தை இயக்கியுள்ளார். இந்நிலையில், பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் இதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பொதுமக்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கையில் போனை நோண்டியபடியே பேருந்தை இயக்கும் காட்சி பார்ப்பவரின் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது.
செல்போன் பயன்படுத்தியபடி பேருந்து இயக்கிய ஓட்டுநர் பணிநீக்கம் - செல்போன் பார்த்தல்
புதுக்கோட்டை: செல்போனை பயன்படுத்திக் கொண்டே பேருந்து இயக்கிய ஓட்டுநரை மாவட்ட ஆட்சியர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் உமா மகேஸ்வரி, பேருந்து ஓட்டுநர் மூக்கையாவை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், இதுதொடர்பாக ஆட்சியர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பேருந்து ஓட்டுநர்கள் பணி நேரத்தில் கண்டிப்பாக செல்போன் பயன்படுத்தக் கூடாது. இதனை மீறும் ஓட்டுநர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இது போன்ற நிகழ்வுகள் இனி நடைபெறாமல் இருக்க பேருந்து ஓட்டுநர்களுக்கு உரிய அறிவுரைகளை தொடர்புடைய அலுவலர்கள் வழங்கிடவேண்டும். பயணிகளின் பாதுகாப்பை தொடர்ந்து உறுதி செய்திடும் வகையில் அலுவலர்கள் கண்காணிக்கப்படும்' என குறிப்பிட்டுள்ளது.