உலக ரத்த தானம் செய்தோர் தினம் கடந்த 14ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டது. அந்த தினத்தில் புதுக்கோட்டை அரசு மருத்துவமனை சார்பாக ரத்த தான முகாம் நடத்தப்பட்டது.
இதில் புதுக்கோட்டையைச் சேர்ந்த கண்ணன் என்பவர் 158ஆவது முறையாக ரத்த தானம் செய்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன், இதுவரையிலும் 157 முறை ரத்த தானம் செய்துள்ளார்.
158ஆவது முறையாக புதுக்கோட்டை மருத்துவமனை முகாமில் ரத்த தானம் செய்தார். தனது 17 வயதில் ரத்ததானம் செய்ய தொடங்கிய இவர் இன்று வரையிலும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை தவறாது இரத்த தானம் செய்துவருகிறார்.
தனது சொந்த ஊரை மட்டுமில்லாமல் தொழிலுக்காக சென்ற வெளிநாடுகளிலும் ரத்த தானம் செய்துள்ளார்.
இது குறித்து கண்ணன் கூறுகையில், “17 வயதில் தொடங்கி தற்போது 58 வயது வரை 158 முறை ரத்த தானம் செய்திருக்கிறேன். இதுவரை என் உடலுக்கு எந்த ஒரு தீங்கும் வந்ததே கிடையாது. நம்மால் ஒரு உயிரை காப்பாற்ற முடிந்தது என்ற மன திருப்தியே என்னை மகிழ்ச்சியடைய வைக்கிறது.
மூன்று மாதத்திற்கு ஒரு முறை இரத்ததானம் செய்வதை சேவையாகவும் வழக்கமாகவும் வைத்திருக்கிறேன். உடலில் உயிர் இயங்குவதற்கு ரத்தம் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது.
அதனை தானம் செய்வதை பெருமையாக நினைத்து செய்ய வேண்டும். தானத்தில் சிறந்தது ரத்ததானம் தான்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க...அமெரிக்கா பல்கலை.யில் ஆன்லைன் பட்டய படிப்பு முடித்த தமிழ் மாணவர்!