தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுய மரியாதை, சமூக நீதி பற்றி பேசுவதற்கு திமுகவுக்கு தகுதி இல்லை: அண்ணாமலை காட்டம் - புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

BJP state president Annamalai criticizes DMK: புதுக்கோட்டை மாவட்டத்தில் பாதயாத்திரை மேற்கொண்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மன்னருக்கு நினைவிடம் அமைக்க அரசு 2 ஏக்கர் நிலம் கொடுக்கவில்லை எனவும், சுய மரியாதை, சமூக நீதி பற்றி பேசுவதற்கு திமுகவுக்கு தகுதி கிடையாது எனவும் விமர்சித்துள்ளார்.

BJP state president Annamalai criticizes DMK in pudukkottai during en mann en makkal padayatra
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 7, 2023, 4:35 PM IST

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டி

புதுக்கோட்டை:பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ பாதயாத்திரை நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்றது. கொட்டும் மழையில் புதுக்கோட்டை மச்சுவாடியில் இருந்து அண்ணா சிலை வரை நடைபெற்ற பாதயாத்திரையில் அண்ணாமலை தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதன் பின்னர் அண்ணா சிலை அருகே பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மீண்டும் நடைபெறுகிறது என்றால் அதற்கு முழு காரணம் பிரதமர் மோடி தான். நாங்கள் தான் ஜல்லிக்கட்டு நாயகன் என்றும், ஜல்லிக்கட்டு நாங்கள் தான் கொண்டு வந்தோம் என்று ஒரு சிலர் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ளலாம்.

ஆனால், பிரதமர் மோடி மட்டுமே ஜல்லிக்கட்டு மீண்டும் நடப்பதற்கு காரணம். ஒரே நாளில் அனைத்து துறை அனுமதி அளித்து சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி உச்ச நீதிமன்றத்தில் எடுத்துக் கூறி அனுமதி வாங்கித் தந்தது பிரதமர் மோடி மட்டும் தான். பிரதமர் மோடி பதவி ஏற்ற பின்னர் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரால் ஒரு முறை கூட துப்பாக்கி சூடு நடந்தது கிடையாது. மீனவர்களின் நலன் காக்கும் அரசாக பாஜக உள்ளது.

தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்பதற்காக தான் இந்த நடைபயணம் நடைபெறுகிறது. விரைவில் தமிழகத்தில் நல்ல மாற்றம் வரும். புதுக்கோட்டை ஈரமும், வீரமும் செறிந்த மண். தேசியத்தின் பக்கம் நின்றவர்கள் புதுக்கோட்டை மாவட்ட மக்கள். பிரிட்டிஷ் காலத்தில் அம்மன் காசு வெளியிட்ட ஒரே சமஸ்தானம் புதுக்கோட்டை மன்னர்கள். 98 தொகுதிகளையும் பார்த்து விட்டு தான் 99வது தொகுதியாக புதுக்கோட்டைக்குள் இன்று யாத்திரை நடக்கிறது.

நாடு சுதந்திரம் அடைந்த போது புதுக்கோட்டை மன்னர் அரசின் கஜானாவில் இருந்த பணத்துடன் மத்திய அரசிடம் ஒப்படைத்தவர். தனி ராஜாவாக இருந்தவருக்கு அவர் வாழ்ந்த இடத்தில் நினைவாலயம் அமைப்பதற்கு 2 ஏக்கர் கொடுக்கவில்லை. புதுக்கோட்டை நகரை மையமாக வைத்து தமிழகத்தில் தொழில் வளர்ச்சி இருந்து வருகிறது. பாரம்பரியம் மிக்க தொகுதியாக இருந்த புதுக்கோட்டை தற்போது 4 எம்.பிக்களை குலுக்கல் முறையில் போய் சந்திக்க வேண்டியுள்ளது.

ஒரே தொகுதியாக இருக்கனும் என கூறி தேர்தல் ஆணையத்திடம் தமிழக பாஜக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளில் 4 முறை ஓட்டு போட்டு கைரேகை தேய்ந்தது தான் மிச்சம் வளர்ச்சி என்பது இதுவரை தமிழகத்தில் இல்லை. இன்பநிதி பாசறை தொடங்கியதும் புதுக்கோட்டை மாவட்டம் தான். சுய மரியாதை, சமூக நீதி பற்றி பேசுவதற்கு திமுகவுக்கு தகுதி கிடையாது.

வேங்கை வயல் விவகாரத்தில் 300 நாட்கள் கடந்த நிலையில் குற்றவாளிகளை கண்டறியமுடியவில்லை. சீப்பை ஒளித்து வைத்து விட்டால் கல்யாணம் நின்னு போகும் என நினைத்து விட்டார்கள். மழையாக இருந்தாலும் சரி எதுவானாலும் யாத்திரை தொடங்கிய பின்னர் மக்கள் என்னுடன் இருந்து வருகின்றனர்.

இந்த யாத்திரை தனிமனிதனின் வெற்றி அல்ல. மீனவர்கள் விவகாரத்தில் திமுக பாடம் எடுக்க வேண்டாம். போனவாரத்தை விட இந்த வாரம் பொய் எது அதிகம் என்ற போட்டியில் தன்னை தானே களம் இறங்கியுள்ளார் ஸ்டாலின். மாவட்டத்தில் 2 அமைச்சர்கள் இருந்தும் வளர்ச்சி எங்கே? நடை பயணம் தொடங்கியதில் இருந்து தெருவிளக்குகள் அணைப்பது தொடங்கி பல்வேறு பிரச்னைகளை நாங்கள் சந்தித்து கடந்து கொண்டிருக்கிறோம்.

புதுக்கோட்டையில் யாத்திரை தொடர்பாக கட்சியினர் பேசினர். எங்கள் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும். வரும் லோக்சபா தேர்தலில் மக்களுக்காக பாடுபட்டு வரும் பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியினரையும் ஆதரியுங்கள்” என்றார். இதனைத் தொடர்ந்து மாவட்ட பாஜக பொருளாளர் முருகானந்தம், ஆட்டுக்குட்டி ஒன்றை அண்ணாமலைக்கு அன்பளிப்பாக வழங்கினார். அந்த ஆட்டிற்கு சிவகாமி என்ற பெயரிட்டு, அதனை ஒரு பெண்ணுக்கு அண்ணாமலை வழங்கினார்.

இதையும் படிங்க: 5வது நாளாக தொடரும் ஐடி ரெய்டு.. சிக்கலில் அமைச்சர் எ.வ.வேலு!

ABOUT THE AUTHOR

...view details