தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டாஸ்மாக்கை மூடக்கோரி வரும் 23ஆம் தேதி ஆர்ப்பாட்டம் - புதுக்கோட்டை பாஜக - tn stalin

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் சூழ்நிலை உருவாகியுள்ளது என புதுக்கோட்டை பாஜக மேற்கு மாவட்டத் தலைவர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்

புதுக்கோட்டையில் டாஸ்மாக்கை மூடக்கோரி வரும் 23ஆம் தேதி ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டையில் டாஸ்மாக்கை மூடக்கோரி வரும் 23ஆம் தேதி ஆர்ப்பாட்டம்

By

Published : Jul 16, 2023, 10:24 PM IST

புதுக்கோட்டையில் டாஸ்மாக்கை மூடக்கோரி வரும் 23ஆம் தேதி ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை:பாஜக புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் விஜயகுமார் செய்தியாளர்களை இன்று (ஜூலை 16) புதுக்கோட்டை மேற்கு மாவட்ட அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், ’’பாஜக தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை உத்தரவுபடி மத்திய அரசு திட்டங்களை தமிழக அரசு இருட்டடிப்பு செய்வதைக் கண்டித்தும் தமிழக அரசு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்தும் பஞ்சாயத்துதோறும் திறந்துள்ள டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வலியுறுத்தியும் வரும் ஜூலை 23ஆம் தேதி புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது எனத் தெரிவித்தார்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 497 பஞ்சாயத்துகளிலும் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளது எனவும்; இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்களும் பங்கு பெறவேண்டும் என்பதற்காக நாளை (ஜூலை 17) முதல் அனைத்து பஞ்சாயத்துகளிலும் தெருமுனை பிரசாரமும் நடைபெற உள்ளது என்றார்.

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி:பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 25 இடங்களை பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றும் என்று கூறியிருந்தார். ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையில் தமிழகத்தில் 39 இடங்களில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறும் சூழ்நிலை உருவாகியுள்ளது என்பது தெள்ளத்தெளிவாக தெரிய வருகிறது.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பாரதி ஜனதா கட்சி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என்று நாங்கள் சொல்லவில்லை. நாங்கள் சந்திக்கும் மக்களே சொல்லி வருகின்றனர். மேலும் அகில இந்திய அளவில் ஒரு பலமான கட்சி இல்லை என்ற நிலையில், பாரதிய ஜனதாவை தவிர வேறு எந்த ஒரு அரசும் இந்தியாவில் ஆட்சி செய்ய முடியாது என்ற சூழ்நிலையை பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய செயல்பாட்டினால் நிரூபித்துள்ளார் என்றார்.

பாஜகவினர் மீது பொய் வழக்கு:மேலும் தமிழகம் முழுவதும் பாஜக முக்கிய நிர்வாகிகள் மீது காவல்துறையினர் பொய் வழக்கைப் பதிவு செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்ட பொருளாளர் முருகானந்தத்தின் மீது கொடுக்கல் - வாங்கல் பிரச்னை காரணமாக மத ரீதியாக பிரச்னையைக் கிளப்ப வேண்டும் என்பதற்காக பொய்யான வழக்கை மாவட்ட காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

இதனை பாரதிய ஜனதா வன்மையாக கண்டிக்கிறது. அவர் மேல் உள்ள பொய் வழக்கை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். அவரை நேரடியாக அழைத்து விசாரணை செய்யாமல் அவர் பாஜகவில் உள்ளார் என்பதற்காகவே திட்டமிட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்து விரைவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது எனக் குறிப்பிட்டார்.

உரிமைதொகையால் பயனில்லை:தமிழக அரசு அறிவித்துள்ள மகளிர் உரிமைத்தொகை 99 சதவீத மக்களுக்கு கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. தேர்தல் நேரத்தில் அனைவருக்கும் உரிமைத் தொகை என்று கூறிவிட்டு தற்போது பல்வேறு நிபந்தனைகளைக் கூறி, 99 சதவீத மகளிருக்கு உரிமைத் தொகை கிடைக்க விடாமல் தமிழக அரசு செய்துவிட்டது’’ என்றார்.

கருப்புப் பணம்:மேலும் அவர் கூறுகையில், ’’உதயநிதி ஸ்டாலின் தேர்தலின்போது நாங்கள் வெற்றி பெற்றால் நீட் தேர்வினை ரத்து செய்வோம். அந்த ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்றார். ஆனால் இதுவரை நீட் தேர்வினை ரத்து செய்யவில்லை. இவ்வாறு இருக்கையில் நரேந்திர மோடி எந்த நேரத்திலும், ரூபாய் 15 லட்சம் பொதுமக்கள் கணக்கில் செலுத்துவேன் என்று கூறவில்லை.

வெளிநாட்டில் உள்ள கருப்புப் பணத்தை மீட்டால், ஒவ்வொருவர் கணக்கிலும் ரூபாய் 15 லட்சம் போடலாம், அந்த அளவிற்கு வெளிநாட்டில் கருப்புப் பணத்தை பதுக்கி உள்ளார்கள் என்று தான் தெரிவித்தார். இதை திசை திருப்பவே நரேந்திர மோடி 15 லட்சம் ரூபாய் கணக்கில் செலுத்துவேன் என்று சொன்னார் என்று சொல்கிறார்கள். நரேந்திர மோடி சொன்னார் என்ற ஆதாரத்தை உதயநிதி தமிழக மக்களிடம் காண்பிக்கட்டும். ஆனால் உதயநிதி தேர்தல் வாக்குறுதியின்போது சொன்ன எந்த ஒரு திட்டமும் நிறைவேறவில்லை’’ என்றார்.

திமுக மதத்தால் செயல்படுகிறது:அரசு அலுவலகங்களில் உள்ள சாமி படத்தை அகற்றுவது குறித்த கேள்விக்கு, ’’இது மதச்சார்பற்ற நாடு, திமுக ஆட்சிக்கு வந்த உடனேயே ஏன் சாமி படத்தை அகற்ற வேண்டும் என்று சொல்கிறார்கள். அரசு அலுவலகங்களில் பெரும்பான்மையில் இந்து சாமி படங்கள் தான் உள்ளது. ஒரு மதத்தை சேர்ந்தவர்களை திருப்திபடுத்தவே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கிராம சபைக் கூட்டத்தில் வைக்கப்பட்ட பெட்டியில் உள்ள கோரிக்கைகள் ஆட்சிக்கு வந்தால் 24 மணி நேரத்தில் தீர்க்கப்படும் என்றார். அவ்வாறு பெட்டியில் போடப்பட்ட கோரிக்கைகளில் டாஸ்மாக்கை அகற்ற வேண்டும் என்று ஒரு மனுவில் கூட இல்லையா? மொத்தத்தில் திமுக ஆட்சி பொதுமக்களை ஏமாற்றும் ஆட்சியாக உள்ளது’’ எனக் கூறினார்.

திமுக அமைச்சரின் சர்ச்சை பேச்சு: '' காலை 7 மணிக்கு டாஸ்மாக்கை திறப்பது மூலம் கூலி வேலைக்கு செல்லும் பணியாளர்களை அமைச்சர் கேவலப்படுத்துகிறார். இது மாதிரியான மோசமான செயல் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லை. ஏழு மணிக்கு டாஸ்மாக்கை திறக்க வேண்டும் என்று அமைச்சர் கூறுகிறார், ஆனால் 7 மணிக்கு பள்ளிக்கூடத்தை திறக்கலாம், மருத்துவமனையைத் திறக்கலாம்.

அரசு அலுவலகங்களைத் திறந்து அதிகாரிகளை வரவழைக்கலாம் என்பதை விட்டுவிட்டு ஏழு மணிக்கு கட்டிங் சாப்பிட நாங்கள் பார்ட்னர்ஷிப் தயார் பண்ணி தருகிறோம் என்று ஒரு அமைச்சரே சொல்கின்றார். ஒரு மூத்த அமைச்சர் இவ்வாறு சொல்கிறார் என்றால் இந்த தகவலையும் நாங்கள் பொதுமக்களிடம் எடுத்துச் செல்ல தயாராக இருக்கிறோம்’’ என்றார்.

இதையும் படிங்க:"அண்ணாமலை இந்து மத நம்பிக்கையை இஸ்லாம் மீது திணிக்கிறார்" - தவ்ஹீத் ஜமாத் தலைவர் குற்றச்சாட்டு!

ABOUT THE AUTHOR

...view details