புதுக்கோட்டை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் நேற்று (ஜனவரி 9) தொடங்கியது. அப்போது தமிழில் உரையாற்றினார். திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கொமதேக, மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர்கள் உரையை புறக்கணித்தனர். மாநில உரிமைகளை பறிக்காதே, கவர்னரே ஆர்எஸ்எஸ் போல செயல்படாதே, எங்கள் நாடு தமிழ்நாடு, கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம் கவர்னரை கண்டிக்கிறோம் என கோஷமிட்டனர்.
இதைக் கண்டு கொள்ளாமல் ஆளுநர் தனது உரையை முடித்தார். அதன் பின்னர் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தமிழக அரசு தயாரித்த உரையை முழுமையாக படிக்காதது சட்டப்பேரவை மரபுகளை மீறிய ஒன்று என்று தெரிவித்தார். தனது உரைக்கு எதிரான தீர்மானம் கொண்டுவரப்பட்டதை அறிந்து கொண்டதும், இருக்கையை விட்டு வேகமாக எழுந்து சென்றார் ஆளுநர் ரவி.