தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதிய கல்விக் கொள்கையை திணிக்க பாஜக முயல்கிறது: மீனாட்சி சுந்தரம்

புதுக்கோட்டை: நீட் தேர்வைப் போலவே புதிய கல்விக் கொள்கையையும் திணிக்க பாஜக அரசு முயற்சிக்கிறது என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர் க.மீனாட்சி சுந்தரம் கூறியுள்ளார்.

By

Published : Jun 13, 2019, 5:49 PM IST

meenatchi sundaram

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்குமாறு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி, அத்தீர்மானத்திற்கு ஒப்புதல் பெறுமாறு மத்திய அரசை வேண்டியது.

மத்திய அரசு அதனை ஏற்காதது மட்டுமல்லாமல் அவ்வாறு அனுப்பப்பட்டத் தீர்மானம் எங்கே இருக்கிறது என்று எங்களுக்குத் தெரியாது என்று அன்றைய மத்திய அமைச்சரில் ஒருவரான நிர்மலா சீதாராமன் மிகவும் அலட்சியத்தோடு பதிலளித்தார்.

மாநில உரிமையைக் காக்க உரிய நடவடிக்கை எடுக்காமல் அப்பிரச்னையில் தமிழ்நாடு அரசு தோல்வியைத் தழுவியது. அதன் காரணமாக மாணவிகள் அரியலூர் அனிதா, பட்டுக்கோட்டை வைசியா உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்தனர்.

தமிழ்நாடு அரசோ, மத்திய அரசோ அதைப் பற்றி கவலைப்பட்டதாக தெரியவில்லை மத்திய அரசு சர்வாதிகாரமாக நீட் தேர்வு நடத்திக் கொண்டிருப்பதை சுயநலம் கருதி தமிழ்நாடு அரசும், முதலமைச்சரும் கண்டு கொள்ளவே இல்லை. தற்போது மத்திய அரசு கல்வியை காவிமயமாக்கும் நோக்கோடு மிக மிக அவசரமாக புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வந்து அமலாக்குவதற்கு துடிக்கிறது.

புதிய கல்விக் கொள்கை அமலுக்கு வந்தால் மாநில மொழிகள் சிதையும். அம்மொழிகளுக்குரிய கலாசாரம், பண்பாடு அனைத்தும் ஒழிக்கப்படும். ஒரே கடவுள் அவர் ராமர், ஒரே நாடு அது இந்தியா, அது இந்துத்துவ நாடு, ஒரே மொழி அது இந்தி என்ற ஆர்.எஸ்.எஸ்ஸின் சித்தாந்தம் கொடிகட்டி பறக்கும்.

கல்வியாளர்கள், ஆசிரியர் சங்கத்தினர், மாணவர் சங்கத்தினர்,பெற்றோர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினரும் புதிய கல்விக் கொள்கை பற்றிய கருத்தினை தெரிவிக்க ஆறுமாத கால அவகாசம் தேவையென விடுத்த கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்காமல் 484 பக்கங்களைக் கொண்ட அவ்வறிக்கையை பற்றிய கருத்தை ஒரு மாதத்திற்குள் தரவேண்டுமென மத்திய அரசு கூறியிருப்பது அக்கொள்கையை அமுல்படுத்த துடிக்கிறது என்பதை மெய்ப்பிக்கிறது.

இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் பாஜகவே ஆட்சியில் உள்ளது. அம்மாநில கல்வி அமைச்சர்கள் புதிய கல்விக் கொள்கையை அப்படியே ஏற்றுக் கொள்வதாக அறிவிப்பார்கள். தென்மாநில அமைச்சர்களின் குரல்கள் எடுபடாது. பெரும்பான்மையான மாநிலங்கள் ஏற்றுக் கொண்டன எனக் கூறி அக்கொள்கையை அனைத்து மாநிலங்களிலும் திணித்துவிடும் ஆபத்து உள்ளது” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details