புதுக்கோட்டை:பாஜக மேற்கு மாவட்டத் தலைவர் விஜயகுமார் தலைமையில் தென்னை விவசாயிகளை பாதுகாக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது. இதற்காக பாஜக சார்பில் ஆயிரம் தேங்காய்கள் டாட்டா ஏஸ் என்னும் சரக்கு வாகனத்தில் கொண்டுவரப்பட்டது. அப்போது ஆர்ப்பாட்டத்துக்கு தயாரான பாஜகவினர் ஆயிரம் தேங்காய்களும், வண்டியுடன் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களிடம் பாஜகவினர் விசாரித்த போது, தங்களுக்கு தெரியாது எனத் தெரிவித்துள்ளனர். இருப்பினும் சந்தேகம் அடைந்த பாஜகவினர் காவல்துறையினருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மறைத்து வைக்கப்பட்ட ஆயிரம் தேங்காய்கள் மற்றும் வாகனத்தை காவல் துறையினர் ஒப்படைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.