புதுக்கோட்டை மாவட்டம், முத்துக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட வேங்கைவயலில் ஆதிதிராவிடர் குடியிருப்புப் பகுதியில் பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் பயன்படுத்தக்கூடிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் சமூக விரோதிகள் சிலர் மனிதக் கழிவை கலந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இச்சம்பவம் நடைபெற்று 190 நாட்கள் ஆகக்கூடிய நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வரக்கூடிய சூழ்நிலையிலும் இதுவரை குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை.
இந்நிலையில் தான் குற்றவாளிகளைக் கண்டறிய சிபிசிஐடி அதிகாரிகள் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள முடிவெடுத்து நீதிமன்றத்தை நாடிய நிலையில், புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் முதற்கட்டமாக 11 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள ரத்த மாதிரிகள் எடுக்க அனுமதி கொடுத்தது. தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி 11 பேரை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வருமாறு சிபிசிஐடி அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர்.
இதில், அன்று மூன்று பேர் ஆஜரான நிலையில் வேங்கைவயலைச் சேர்ந்த பட்டியலின மக்கள் எட்டு பேர் ஆஜராகவில்லை. பின்னர் அந்த எட்டு பேரும் ரத்த மாதிரிகள் கொடுக்காமல் இருந்த நிலையில் பின்னர் சிபிசிஐடி அதிகாரிகள் மேலும் 10 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்றத்தில் அனுமதி பெற்று, அந்த பத்து பேருக்கும் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது. அதேபோல் இருவருக்கு குரல் மாதிரி பரிசோதனையும் செய்து, சென்னையில் உள்ள அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்து, 13 பேரில் டிஎன்ஏ பரிசோதனை முடிவுக்காக தற்போது காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் டிஎன்ஏ பரிசோதனைக்கு ரத்த மாதிரி கொடுக்க மறுப்புத் தெரிவித்த எட்டு பேரில் ஒருவரான முத்துகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையை நாடி, பாதிக்கப்பட்ட மக்களையே காவல் துறையினர் பரிசோதனைக்கு உட்படுத்த முயல்வதாக வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கின் அடிப்படையில் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள மறுப்பு தெரிவித்த எட்டு பேரும் வழக்கு விசாரணை நடைபெறும் புதுக்கோட்டை வன்கொடுமை நீதிமன்றத்தையே நாடி தீர்வு காணலாம் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதி இளங்கோவன் உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட எட்டு பேரும் கடந்த ஜூன் 30ஆம் தேதி புதுக்கோட்டை வன்கொடுமைத் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜராகினர். ஆஜரானவர்களிடம் சிபிசிஐடி அதிகாரிகள், டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்வதற்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு நகலை சம்பந்தப்பட்ட எட்டு நபர்களிடமும் நீதிபதி ஜெயந்தி வழங்கி, அதனைப் படித்துப் பார்த்து அதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் கடந்த ஜூலை 1ஆம் தேதி மீண்டும் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி, தங்களது விளக்கத்தை தெரிவிக்கலாம் என்று கூறி அந்த எட்டு பேரையும் அனுப்பி வைத்தார்.
அதன்பின் கடந்த ஜூலை 1ஆம் தேதி சம்பந்தப்பட்ட எட்டு பேரும் மீண்டும் வன்கொடுமைத் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகினர். மேலும் இவர்களுடன் இந்த வழக்கை விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி டிஎஸ்பி பால்பாண்டியும் ஆஜரான நிலையில், டிஎஸ்பி பால்பாண்டியிடம் நீதிபதி இந்த வழக்கில் டிஎன்ஏ பரிசோதனை எதனால் செய்யப்படுகிறது என்று கேட்டார்.