அதிமுக உறுபினர்களுக்கு பேச்சுரிமை மறுப்பு: புதுக்கோட்டை நகராட்சியில் பரபரப்பு புதுக்கோட்டை:புதுக்கோட்டை நகராட்சியின் கூட்டம் நேற்று (ஜூன் 27) நகர்மன்ற கூடத்தில் நகர் மன்றத் தலைவர் திலகவதி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணைத் தலைவர் லியாகத் அலி, ஆணையர் சித்ரா முன்னிலை வகித்தனர் .நகர்மன்ற தலைவர் திலகவதி பேசுகையில், காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு ரூ.75 கோடி தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
இந்நிலையில், இதற்கு டெண்டர் விடப்பட்டு பணி துவங்கப்பட உள்ளது மற்றும் தூய்மை பணிக்காக தனியாரிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில் தூய்மை பணியாளர்கள் மூலம் வீட்டுக்கு வீடு நேரடியாக சென்று குப்பைகள் அள்ளப்படும். இதற்காக 288 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இது 9 பகுதியாக பிரிக்கப்பட்டு பணிகள் நடைபெற உள்ளது என்றார்.
மேலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் புதுக்கோட்டை நகராட்சிக்கு 14 எம்.எல்.டி குடிநீர் வழங்க வேண்டும். ஆனால் 6 அல்லது 7 எம்.எல்.டி வழங்கப்படுவதாக தெரிகிறது. இதை கண்காணிக்க மீட்டர் பொருத்தி ஆய்வு செய்யப்பட உள்ளது என தெரிவித்தார்.பின்னர், மின்சாரம் தடைபடும்போது ஜெனரேட்டர் வைத்து குடிநீர் தொடர்ந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
துணை தலைவர் லியாகத் அலி பேசுகையில், "நகர்மன்ற கூட்டம் தொடங்கும் போது நகராட்சி அதிகாரிகள் தாமதமின்றி உரிய நேரத்தில் வரவேண்டும் எனவும் உறுப்பினர்கள் கருத்துக்கு பதில் அளிக்க வேண்டும்" என்றார்.
அதன்பின் உறுப்பினர்கள் பேசியதாவது, தி.மு.கவை சார்ந்த சுப.சரவணன் தனது வார்டில் சீல் போட்டு தார்சாலை போடப்படுவதால் அது தரமாக இல்லை என்றும் புதிய சாலை போடவேண்டும் எனறு கேட்டுக்கொண்டார். பின்னர் ராஜேஸ்வரி பேசுகையில், மறைமலை நகர் குடியிருப்பு பகுதி ஏ மண்டலமாக பிரிக்கப்பட்டுள்ளதால் கடுமையாக வரி உயர்வு செய்யப்பட்டுள்ளது ஆக தெரிவித்தார். இதனால் வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
நாய் தொல்லை:காங்கிரஸ் உறுப்பினர் ராஜா முகமது திடீரென எழுந்து தன்கையில் வைத்திருந்த பிளக்ஸ் பேனரை விரித்து காட்டி பேசியதாவது, "தனது வார்டில் நாய் தொல்லை அதிகம் உள்ளது. நாய்கள் கூட்டமாக வந்து ஆடு, மாடு மற்றும் நடந்து செல்பவர்களை விரட்டி சென்று கடிக்கிறது. இதில் கன்றுகுட்டி ஆட்டை நாய் கடித்ததில் இறந்து போயின. இதுபோல் தெருவில் நடந்து செல்லும் சிறுவர்களை கடித்தால் என்னவாகும். இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதேபோல் அனுமதியின்றி உள்ள குடிநீர் இணைப்புகளை துண்டித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறினார்.
கூடுதல் வரி:தி.மு.க உறுப்பினர் மூர்த்தி நகராட்சிக்கு ரூ.27 கோடிக்கு வரி பாக்கி இருப்பதாக தெரிவித்தனர். இதற்கு காரணம் கூடுதல் வரிவிதிப்பு எனவும் ஏ, பி, சி மண்டலம் என்பதை மாற்ற தனி தீர்மானம் போட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். உணவகங்களில் சாப்பிட்ட இலை எடுக்க ரூ.750 செலுத்துகின்றனர். சில நேரங்களில் 2 நாட்களுக்கு ஒரு முறை எடுக்கப்படுவதாக புகார் அளிக்கிறன்றனர். தினம் எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பிறப்பு மற்றும் இறப்பு சான்று வழங்க 10 நாட்கள் ஆகிறது. உடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
பின்னர் நகர் மன்ற கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது, அப்போது அதிமுக உறுப்பினர்கள் தங்களது வார்டு குறைகள் குறித்து பேசுவதற்கு வாய்ப்பு கேட்டனர்.இந்நிலையில் நகர்மன்ற கூட்டம் முடிவு பெற்றதாக அறிவிக்கப்பட்டு, தேசிய கீதம் பாடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, நகர் மன்ற தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் வெளியேறும் போது, அதிமுக உறுப்பினர்கள் நகர் மன்ற கூட்டத்தில் பேச்சுரிமை மறுக்கப்படுவதாகவும், இதனால் தங்களது வார்டு குறைகளை எடுத்துரைக்க முடியாமல் போவதாகவும், இது ஜனநாயகத்திற்கு உகந்து அல்ல என்று கூறி நகர்மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவரை முற்றுகையிட்டு கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக கூட்டம் துவங்கியதும் முன்னாள் நகர்மன்ற தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான முகமது கனி மறைவிற்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதையும் படிங்க:செப்.15 முதல் ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்