புதுக்கோட்டை:புதுக்கோட்டையில் உள்ள மன்னர் மாளிகையில், அண்மையில் உயிரிழந்த ராணி ரமாதேவியின் திருவுருவப் படத்தை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று(மே.7) திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "60 மாதங்களில் வர வேண்டிய எதிர்ப்பு, திமுக ஆட்சியின் மீது இரண்டு ஆண்டுகளிலேயே வந்துள்ளது. தற்போது நடைபெற்று கொண்டிருப்பது மக்களுக்கு எதிரான ஆட்சி.
ஓபிஎஸ் மற்றும் சபரீசன் சந்திப்பு நட்பு ரீதியான சந்திப்பு என்றுதான் நான் பார்க்கிறேன். அதிமுக பொதுச்செயலாளருக்கு நாம் அறிவுரை கூற முடியாது, மக்கள்தான் சரியான அறிவுரையை கொடுக்க வேண்டும். பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் நிறைய காலம் உள்ளது, அப்போது மக்கள் முன்னேற்ற கழக நிலைப்பாடு தெரியும். வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்திற்குள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பாராளுமன்ற தேர்தல் குறித்து தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவிக்கும்.
ஓபிஎஸ் மாநாடு குறித்து நான் எந்த கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை, மக்கள்தான் முடிவு செய்யும் இடத்தில் உள்ளனர். அதிமுக தற்போது தீயவர்களின் கையில் சிக்கி உள்ளது, அந்த பிடியிலிருந்து அதிமுக தொண்டர்களை மீட்டு திமுகவின் தீய ஆட்சியை விரட்டி, மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும். திமுக தேர்தல் அறிக்கையில் கூறியதை நத்தையை விட குறைந்த வேகத்தில் செயல்படுத்தி வருகின்றனர். கோடநாடு வழக்கில் பழனிச்சாமி திமுகவோடு ரகசிய உடன்பாடு வைத்துள்ளார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட டிஎம்கே பைல்ஸ் விவகாரத்தை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே ஒரு குடும்பத்தின் கீழ் முப்பதாயிரம் கோடி அளவிற்கு சிக்கி இருப்பதாக திமுக அமைச்சர் ஒருவரே கூறியதாக செய்திகள் வருகின்றன. இந்த ஆட்சி மக்கள் விரோத ஆட்சி, 12 மணி நேர வேலை சிந்தனை வந்ததே திமுகவின் ஹிட்லர் தனத்தை காட்டுகிறது. திமுக ஆட்சி, பழனிச்சாமி ஆட்சியை விட மிகவும் மோசமாக சென்று கொண்டிருக்கிறது. ஆணவத்தின் அகங்காரத்தின் உச்சியில் திமுக இருந்து கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருகிறது, மக்கள் சரியான பாடம் அவர்களுக்கு புகட்டுவார்கள்.
நான் உயிரோடு இருக்கும் வரை அதிமுகவை மீட்பதில் பின் வாங்க மாட்டேன். அதிமுகவின் சட்டவிதிகளை மாற்றிவிட்டு துரோகம் செய்துவிட்டு இன்று பொதுச்செயலாளர் என்ற பதவியை எடப்பாடி விலைக்கு வாங்கியுள்ளார். உப்பை தின்றவன் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும், அதற்குண்டான காலம் வரும்.