புதுக்கோட்டை: இச்சடியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் கொடியேற்றும் நிகழ்வு இன்று (நவ. 23) நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் கலந்து கொண்டு கொடியேற்றினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி தினகரன், "இரட்டை இலை இருந்தும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தற்போது எவ்வளவு பலவீனம் அடைந்து வருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இதனை மறைப்பதற்காக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல கட்சிகளில் இருந்தும் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து தொண்டர்களை அதிமுகவில் இணைத்து வருகின்றனர்.
அதிமுக தற்போது வட்டார கட்சியாக பலவீனம் அடைந்து வருகிறது. இதனால்தான் ஓபிஎஸ், கூட்டணி இல்லாமல் அதிமுக வெற்றி பெற முடியாது என்று கூறியுள்ளார். டிசம்பர் அல்லது ஜனவரியில் தான் அமமுக யாருடம் கூட்டணி என்பது தெரியவரும். முன்னாள் அமைச்சர்களின் ஊழல் வழக்கு விசாரணையை நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும்.
இதனை கால தாமதப்படுத்தும் விதமாக ஆளுநர் அதற்கான ஒப்புதலை கிடப்பில் போட்டிருந்தது தவறு. இதுபோன்று ஆளுநர் காலதாமதப்படுத்தினால் நாடு முழுவதும் ஊழல் வழக்குகள் பெருகும் நிலை ஏற்படும். திமுக ஆட்சி மக்கள் விரோத ஆட்சியாக, மக்களை ஏமாற்றும் ஆட்சியாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. நிர்வாக திறமை இன்மைதான் இந்த ஆட்சியில் உள்ளது. எடப்பாடி பழனிசாமி செய்த தவறால், திமுக திருந்தி இருக்கும் என்று நினைத்து மக்கள் திமுக ஆட்சியை கொண்டுவந்தனர். ஆனால் தற்போது திமுக ஆட்சி மீது பொதுமக்களுக்கு மிகப்பெரிய வெறுப்பு ஏற்பட்டுள்ளது.