புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கில் பெட்டி பெட்டியாக கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட அம்மா கிரைண்டர் மற்றும் மின் விசிறி ஆகியவை பயனாளிகளுக்கு வழங்கப்படாமல் அடுக்கி வைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அரிசி வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா அம்மா கிரைண்டர் மற்றும் மின்விசிறிகள் வழங்கப்பட்டன.
இவைகள் அந்தந்த மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டு, பயனாளிகளுக்கு வழங்குவதற்காக அவ்வப்போது லாரிகள் மூலமாக ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படுவது வழக்கம்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கில், கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அம்மா கிரைண்டர் மற்றும் மின்விசிறி ஆகியவை அனுப்பப்பட்டு, அங்கு சேமித்து வைக்கப்பட்டு, பயனாளிகளுக்கு வழங்கும் போது லாரிகள் மூலமாக அனுப்பப்பட்டு வந்தது.
புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொறுத்தவரை 4 லட்சத்து 82 ஆயிரம் பயனாளிகளுக்கு அம்மா கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்கப்படுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதன்படி பயனாளிகளுக்குப் பொருட்களும் வழங்கப்பட்டன.
குவியல் குவியலாக அடுக்கிய அம்மா கிரைண்டர்
இந்நிலையில் தமிழ்நாட்டில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. இந்நிலையில் கடந்த ஆட்சிக்காலத்தில் பயனாளிகளுக்கு விலையில்லாமல் வழங்கப்பட்ட அம்மா கிரைண்டர் மற்றும் மின்விசிறி ஆகியவை பெட்டி பெட்டியாக, தற்போது புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கில் குவியல் குவியலாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
புதுக்கோட்டையில் பெட்டி பெட்டியாக அம்மா கிரைண்டர் இதில் ஆயிரக்கணக்கான கிரைண்டர்கள் மற்றும் மின்விசிறிகள் பழுதடைந்து வருகின்றன. இவைகள் யாருக்கும் பயனில்லாமல் தற்போது வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
பயனாளிகளுக்கு வழங்குவதற்காக அரசால் அனுப்பி வைக்கப்பட்ட கிரைண்டர்கள், மின்விசிறிகள் ஆகியவற்றை முறையாக வழங்காமல் சேமித்து வைத்த அலுவலர்கள் மீது விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை வலுத்து வருகிறது.
தமிழ்நாடு அரசு உடனடியாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஆய்வு செய்து, இது போன்று தேங்கிக்கிடக்கும் கிரைண்டர்கள், மின்விசிறி ஆகியவற்றை உரிய பயனாளிகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் பெட்டி பெட்டியாக கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட அம்மா கிரைண்டர் மற்றும் மின் விசிறி ஆகியவை பயனாளிகளுக்கு வழங்கப்படாமல் அடுக்கி வைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:Valimai Release Date Announced:'வலிமை' ரிலீஸ் தேதி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!