புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கடந்த 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 6 ஆம் தேதி வரை மாபெரும் புத்தகத் திருவிழா நடைபெற்றது. இந்த புத்தக திருவிழாவின் இறுதிநாள் நிகழ்ச்சியில் நடிகர் தாமு பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், “கல்வியை தேடித்தேடி செல்ல வேண்டுமென அப்துல்கலாம் கூறுவார். தேவையற்ற விஷயங்களில் விடுதலையும், தேவையான விஷயங்களை புகுத்துவது தான் கல்வி. ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவாது என்று சொல்வது முற்றிலும் புறம்பானது. சுரக்காய் பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது, இன்றைய காலகட்டத்தில் கிட்னி பேஷண்டுகள் அதிகமாக உள்ளதற்கு காரணம் சுரக்காயை அவமதித்ததே.
நல்ல நல்ல வார்த்தைகளை தவறாக பயன்படுத்தி காலங்காலமாக பழகிவிட்டோம். கனவு காணுங்கள் என பல அறிஞர்கள் சொல்கிறார்கள், கனவு என்பது உறக்கத்தில் வருவதில்லை கனவு, உறங்க விடாமல் செய்வது தான் கனவு. பகல் கனவு பலிக்காது என்று சொல்வதில் சதி உள்ளது. புத்தகங்களில் நாசமாய் போவது, மனைவியை வீட்டை விட்டு துரத்துவது, மது குடிப்பது எப்படி என புத்தங்கள் ஒன்றும் கிடையாது. எல்லா புத்தகங்களும் வாழ்க்கை உருவாக்குவதற்கே பயன்படுகிறது.
ஒரு நல்ல புத்தகம் 100 நண்பர்களுக்கு சமம், ஒரு நல்ல நண்பன் ஒரு நூலகத்துக்கே சமம். மிமிக்கிரி செய்வதெல்லாம் அது ஒரு மிகப்பெரிய கலை. குழந்தைகளை வளர்ப்பதில் பெற்றோர்கள் உதாரணமாக இருக்க வேண்டும். சுமோக்கிங், ட்ரிங்கிங் இரண்டையும் புறக்கணித்தால் தான் குழந்தைகள் நலமாக வளரும். உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் மிமிக்கிரியே செய்ய முடியும். ஆகவே உடல் நலம் குறித்த புத்தகங்களை அனைவரும் வாசிக்க வேண்டும்.