தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா காலத்தில் அரசின் சலுகைகள் முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கு கிடைக்கிறதா? - ஓர் கள ஆய்வு!

புதுக்கோட்டை: கரோனா காலத்தில் சாமானிய மனிதர்களே குடும்பச் சூழ்நிலையை சமாளிப்பது என்பது கடினமாக இருக்கிறது. இந்நிலையில் மாற்றுத்திறனாளியாக இருப்பவர்களின் நிலை தான் என்ன? அவர்களுக்குத் தேவையானதை அரசாங்கம் முறையாக செய்கிறதா என்பதைப் பற்றி விளக்குகிறது, இந்த ஆய்வுக் கட்டுரை...

கரோனா காலத்தில் அரசின் சலுகைகள் அனைத்தும் முறையாக மாற்றுத் திறனாளிகளுக்கு கிடைக்கிறதா? - ஓர் கள ஆய்வு
கரோனா காலத்தில் அரசின் சலுகைகள் அனைத்தும் முறையாக மாற்றுத் திறனாளிகளுக்கு கிடைக்கிறதா? - ஓர் கள ஆய்வு

By

Published : Nov 29, 2020, 7:28 PM IST

Updated : Dec 14, 2020, 12:16 PM IST

புதுக்கோட்டை மாவட்ட நகரப்பகுதிக்குள் மட்டுமே 1000-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் வசித்து வருகின்றனர். பார்வையற்றோர், காது கேளாதோர், வாய் பேச முடியாதவர்கள், உடல் உறுப்புகள் ஊனமுற்றவர்கள், விபத்தால் மாற்றுத்திறனாளி ஆனவர்கள், போலியோவால் பாதிக்கப்பட்டவர்கள் என மாவட்டம் முழுவதும் 15,000-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் வசித்து வருகின்றனர். ஒவ்வொருவரும் தனது வாழ்வாதாரத்தை கூலி வேலை செய்து தீர்த்துக்கொள்ளும் கஷ்டமான சூழ்நிலையில் இருக்கிறார்கள். இந்நிலையில் கரோனாவால், நிறைய மாற்றுத்திறனாளிகள் வேலை இழந்து, தனது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.

அந்த வரிசையில், தெருவோரங்களில் சிறு சிறு வியாபாரம் செய்பவர்கள், தன்னால் முடிந்த கூலி தொழில் செய்பவர்கள் என குடும்பச் சுமையை சுமப்பவர்களில், பெண்களும் அடங்குவர். தன்னுடைய வேலைகளையே அவர்களால் செய்து கொள்ள முடியாத நிலையில் இருக்கும்போது, தனது குடும்பத்தையும் சேர்த்து சுமக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு எந்த வேலை கிடைத்தாலும், தன்னால் என்ன முடியுமோ, அதை எல்லாம் செய்து வருமானம் ஈட்டி வருகின்றனர். இத்தகைய கொடுஞ்சூழலில் உள்ளவர்களை காக்கும் பொறுப்பு அரசிற்கு உண்டு. இருப்பினும், இந்த கரோனா காலத்தில் மாதத்திற்கு 30 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிப்பவர்களாலேயே குடும்பச் செலவை ஈடு செய்வதில் சிரமம் ஏற்படுகிறது. ஆனால், இவர்களுக்கு அரசின் மாத ஊக்கத் தொகை வெறும் 1000 ரூபாய் மட்டுமே. அதுவும் இந்த கரோனா காலங்களில் தனது சிறு வேலையையும் இழந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அரசாங்கம் தங்களுக்கு மாதம் ரூ.3,000 வழங்க வேண்டும் எனவும்; தங்களுக்கான சலுகைகளை கொடுப்பதில் அதிகாரிகள் அலைக்கழிக்காமல், உடனடியாக வழங்க வேண்டும் எனவும்; ஆங்காங்கே தங்களுக்கென மருத்துவ முகாம்களை அமைக்க வேண்டும் என்றும் பல்வேறு கோரிக்கைகளை பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் முன்வைக்கின்றனர்.
இதுகுறித்து முருகேசன் என்பவர் பேசுகையில், 'விபத்தில் கால்களை இழந்து, நான் மாற்றுத்திறனாளியாகி 19 வருடங்கள் ஆகிறது. அரசின் சலுகைகள் நன்றாக இருந்தாலும்கூட கிடைப்பதற்கு மிகவும் தாமதம் ஆகிறது. அந்த தருணத்தில், எங்களுக்குக் கிடைக்கக்கூடிய சிறு சிறு வேலைகளில்கூட பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரையிலும் நிவாரணத் தொகையாக 1,000 ரூபாய் வழங்கினார்கள். இது போதுமானதாக இல்லை. அதனால், வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் வகையில், ஏதேனும் உரிய தொகையை அரசு வழங்கினால், நன்றாக இருக்கும்' என்று தெரிவித்தார்.
இதுகுறித்து ராமகிருஷ்ணன் என்பவர் பேசுகையில், 'இதுவரையிலும் எனக்கு அடையாள அட்டை, ஊக்கத்தொகை என அனைத்தும் சரியாக வந்து கொண்டிருக்கிறது. நான் நகர்ப் பகுதியில் இருப்பதால், இங்கு வந்து பெறுவதற்கு எளிதாக இருக்கிறது. ஆனால் வெளியில் இருந்து வருபவர்களுக்கு மிகவும் சிரமமாக இருக்கும் நிலையில், ஆங்காங்கே முகாம்கள் போன்றவற்றை அமைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினால் நன்றாக இருக்கும். நிறைய மாற்றுத்திறனாளிகள் பயனடைவார்கள்' என்று தெரிவித்தார்.
இதுகுறித்து ரமேஷ் என்பவர் கூறுகையில், 'நான் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் பொறுப்பில் இருக்கிறேன். புதுக்கோட்டை மாவட்டம் 90 கிலோ மீட்டர் வரை பரந்த விரிந்த மாவட்டம். அப்படி இருக்கும்பொழுது மாவட்டத்திற்கு ஒரு அலுவலகம் தான் உள்ளது. ஆங்காங்கே, ஏதேனும் முகாம்கள் அமைத்தால், அங்கிருந்து வரும் மாற்றுத்திறனாளிகள் பயனடைவார்கள். கை, கால்களை இழந்த மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்து வருவதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். அதேபோல மாற்றுத்திறனாளிகளுக்கு என ஏதேனும் நிலம், சிறிய வீடு போன்றவற்றை வழங்கினால் நன்றாக இருக்கும். இந்த கோரிக்கையை நாங்கள் பல ஆண்டுகளாக, அரசாங்கத்திடம் வைத்து வருகிறோம். பல்வேறு போராட்டங்களையும் நடத்தி இருக்கிறோம். ஆனால், இதுவரை எந்த ஒரு கோரிக்கையும் நிறைவேறவில்லை. புதுக்கோட்டை மாவட்டத்தின், நகர்ப் பகுதிக்குள் மட்டுமே ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் இருக்கின்றனர். இந்த கரோனா காலத்தில் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர். அவர்களுக்கு வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் வகையில், உரிய தொகையை அரசாங்கம் வழங்கினால், மிகவும் உதவியாக இருக்கும். இங்கிருந்து மருத்துவக் கல்லூரிக்குச் சென்று வைத்தியம் பார்க்க சிரமமாக இருப்பதால், மாவட்டத்தின் மத்தியிலேயே மாற்றுத்திறனாளிகளுக்கு என மருத்துவமனை அமைக்க வேண்டும்' என்று தெரிவித்தார்.
இதுகுறித்து கணேஷ் என்பவர் பேசுகையில், 'மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பாக மாதம் 3 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையாக உயர்த்தக் கோரியும், நிலம் வழங்கக்கோரியும் பல்வேறு போராட்டங்களில் இதுவரை நடத்தி இருக்கிறோம். ஆனால், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. 100 ரூபாய் பணத்துக்காககூட நாய் படாதபாடு, படவேண்டி இருக்கிறது. மாதத்திற்கு ஆயிரம் ரூபாய் வழங்குவது என்பது ஒரு குடும்பத்தை காக்க உதவாது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. கரோனா காலத்திற்குப்பிறகு, மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வழங்குவதில், தாமதம் ஏற்பட்டுள்ளது. ஊக்கத் தொகை வழங்குவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளை அலைய விடுவது நியாயமே கிடையாது. வருகின்ற டிசம்பர் 2ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி போராட்டம் நடத்தலாம் என இருக்கிறோம். எங்களது போராட்டத்திற்கு அரசாங்கம் ஒரு முறையாவது செவிசாய்க்க வேண்டும்' என்று தெரிவித்தார்.

கரோனா காலத்தில் அரசின் சலுகைகள் முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கு கிடைக்கிறதா? - ஓர் கள ஆய்வு!
இதுகுறித்து பாஷா என்பவர் கூறுகையில்,'இந்த காலத்தில் அதிக அளவில் சம்பாதிப்பவர்கள்கூட குடும்பத்தை ஓட்டுவது என்பது மிகக்கடினமாக உள்ளது. இந்நிலையில் மாதத்திற்கு ஆயிரம் ரூபாய் என்பதை உயர்த்தி அரசாங்கம் ₹3000 மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கினால், பேருதவியாக இருக்கும். கை, கால், கண் போன்றவற்றை இழந்து நாங்கள் படும் இன்னல்களுக்கு எல்லைகளே கிடையாது. அன்றாட கூலிக்குப் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறோம். அரசாங்கம் மானியத்தில் ஸ்கூட்டி, இலவச வாக்கிங் ஸ்டிக் போன்றவற்றை வழங்குகிறது. இருப்பினும் அது வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. உரிய காலத்தில் அனைத்தையும் கொடுத்தால் நன்றாக இருக்கும். அதேபோல எங்களுக்கு ஒரு சிறிய வீட்டை அரசாங்கம் கட்டிக் கொடுத்தால், எங்களுக்கும் எங்களது தலைமுறையினருக்கும் மிகப்பெரிய உதவியாக இருக்கும்' என்று கோரிக்கை விடுத்தார்.இதுகுறித்து ராமகிருஷ்ணன் என்பவர் கூறுகையில்,'எனக்கு அனைத்துச் சலுகைகளும் சரியான முறையில் கிடைத்தாலும்கூட தற்போது நிறைய மாற்றுத்திறனாளிகளுக்குப் பல சலுகைகள் சென்று சேர்வதே கிடையாது. அரசாங்கத்திடம் 50க்கும் மேற்பட்ட சலுகைத் திட்டங்கள் உள்ளன. மக்களுக்கு அதனை விழிப்புணர்வாக எடுத்துக்கூறி, அவர்களை பயனடையச் செய்ய வேண்டும். புதுக்கோட்டை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மூலம் நாங்கள் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் ஒற்றுமையாக இருந்து ஒருவருக்கு ஒருவர் துணையாக நின்று உதவி செய்து கொள்கிறோம். மத்திய அரசும், மாநில அரசும் மாற்றுத்திறனாளிகளுக்கு என தனிக்கவனம் செலுத்தினால் இந்த நிலை மாறும்’ என்று தெரிவித்தார்.மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை வைத்து புதுக்கோட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரை சந்தித்து கேட்டபோது, 'புதுக்கோட்டை மாவட்டத்தில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் வருகின்றனர். இந்த காலத்தில் நிவாரணத்தொகை 1,000 ரூபாய் வழங்கும்பொழுது, புதிதாக நிறைய மாற்றுத்திறனாளிகளை இணைத்து அடையாள அட்டைகள்கூட வழங்கினோம்.அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கப்படும் நிதி சரியான முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு சில காலங்களில், அவர்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகள் தாமதமானாலும்கூட முறையாகச் சென்று சேருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அப்படி யாரேனும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் என்று தெரிந்தால், நீங்களே எங்களுக்கு தகவல் கொடுங்கள். தாராளமாக அவர்களுக்கு முன் நின்று உதவி செய்யத் தயாராக இருக்கிறோம். அதேபோல, நவீன வாக்கர்(batter operator wheel chair) கருவியை அரசு முற்றிலும் இரண்டு கால்களையும் செயலிழந்த மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசமாக அதிக அளவில் வழங்க வேண்டும். புதுக்கோட்டையில் வருடம்தோறும் 30 பேருக்கு இந்தக் கருவியை வழங்கி வருகிறோம். அனைவருக்கும் விண்ணப்பித்த ஒரே நாட்களுக்குள் அடையாள அட்டை வழங்குகிறோம். அதில் எந்தவித தாமதமும் ஏற்படுவதே கிடையாது. அப்படி ஏற்பட்டால் யார் புகார் செய்தாலும், அதனை ஏற்று நடவடிக்கை எடுத்து உடனடியாக, அது கிடைக்கும்படி செய்ய நாங்கள் முழுமையாகத் தயார் நிலையில் இருக்கிறோம். மாற்றுத்திறனாளிகளின் வேலையை நாங்கள் ஒருபோதும் அலைக்கழிப்பதே கிடையாது. மாற்றுத்திறனாளிகளுக்கு என 40க்கும் மேற்பட்ட இலவச சலுகைத் திட்டங்கள் உள்ளன. எங்களால் முடிந்தவரை விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களுக்கு தெரியப்படுத்துகிறோம். இல்லாதபட்சத்தில் தொலைபேசியில் தொடர்புகொண்டு அல்லது நேரில் சந்தித்து சலுகைகளை நேரடியாகவே வழங்குகிறோம். மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் நியாயமானதுதான். ஆனால், அதனை அரசாங்கம் ஏற்று எங்களுக்கு கொள்கையாக கொடுத்தால், அதனை செயல்படுத்த நாங்கள் தயாராகத்தான் இருக்கிறோம். அரசாங்கம்தான் அதற்கு மனது வைக்க வேண்டும்' என்று கூறினார்.

இதையும் படிங்க: அரசு அலுவலகங்களில் குறை தீர்க்கும் முறை பொதுமக்களுக்கு வசதியாக உள்ளதா? - ஓர் நேரடி கள ஆய்வு!

Last Updated : Dec 14, 2020, 12:16 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details