புதுக்கோட்டை மாவட்ட கருவூலத்தில் அலுவலக மேலாளராக பணிபுரிந்துவருகிறார், ராஜேந்திரன் (58). இவருக்கு ஜூன் 30ஆம் தேதி கரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டு நோய்த்தொற்று உறுதிச்செய்யப்பட்டது. ஜூலை 1ஆம் தேதி ராணியார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
கரோனா சிகிச்சை
ராஜேந்திரனுக்கு மூன்று நாட்கள் ஜுரம், இருமல், மூச்சுத்திணறல் இருந்த காரணத்தினால் ஒரு நிமிடத்திற்கு 12 லிட்டர் ஆக்சிஜன் கொடுக்கும் நிலை ஏற்பட்டது. அப்போதும்கூட இவருக்கு ஆக்சிஜன் செறிவு 87 விழுக்காடுதான் இருந்தது. ஐந்து நாட்கள் கழித்து அவர் மிகவும் கடுமையான மூச்சுத் திணறலுக்கு ஆளாகி ஆக்சிஜன் செறிவு 75 விழுக்காடு என்ற நிலைக்கு சென்றது. இதையடுத்து இவருக்கு 4 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வைரஸ் தொற்று எதிர்ப்பு மருந்துகள், ஒன்பது ஊசிகள் செலுத்தப்பட்டன. ஆனாலும் உடலில் சிறிதளவுதான் முன்னேற்றம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து 42 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு ஊசிகள் செலுத்தப்பட்டன. பிறகு குப்புறப்படுக்க வைத்த நிலையில் அவருக்கு ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. கபசுரக் குடிநீர், நோய் எதிர்ப்பு மருந்துகள், யோகா போன்ற பயிற்சிகளும் அவருக்கு தரப்பட்டன. தொடர் சிகிச்சைகள், மருத்துவர்களின் கவனிப்பு உள்ளிட்டவை ராஜேந்திரனை கரோனாவிலிருந்து மீட்டது.
ஜூலை 9ஆம் தேதி கரோனா இல்லை என்று பரிசோதனை முடிவுகள் வந்த போதும், இவருக்கு நுரையீரல் பாதிக்கப்பட்டு இருந்த காரணத்தினால் கூடுதலாக 8 நாட்கள் சிகிச்சை அளிக்கவேண்டியிருந்தது. இப்போது முழு சிகிச்சையும் முடிந்து ராஜேந்திரன் இன்று (ஜூலை 18) வீடு திரும்பினார். சுமாராக 16 நாள்கள் இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.