புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் 108 கால் சென்டர் பணியாளர்களுக்கு பணி நியமான ஆணையினை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார். இதற்கான விழா மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரியின் தலைமையில் நடந்தது.
பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தெரிவித்ததாவது, விபத்து, பிரசவம் போன்ற அவசர காலங்களில் மக்கள் 108 ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். 108 சேவைக்கான கால் சென்டர் சென்னையில் செயல்பட்டு வருகிறது.
அதற்கு அடுத்தபடியாக, புதுக்கோட்டையில் 108 சேவைக்கான கால் சென்டர் தொடங்கப்பட உள்ளது. அதில் பணியாற்றும் 19 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கப்படுகிறது. கரோனா தொற்று காலத்தில், 108 ஆம்புலன்ஸ் சேவை மக்களின் உயிர்காக்கும் பணியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும், 1,005 எண்ணிக்கையிலான 108 ஆம்புலன்ஸ்கள் செயல்பட்டு வருகின்றன. நோய் தொற்று காலத்தின் தேவையை கருதி தமிழ்நாடு முதலமைச்சர் ரூ.103.50 கோடி மதிப்பீட்டில் 500 புதிய 108 ஆம்புலன்ஸ் வாங்க உத்தரவிட்டுள்ளார். அதில், 130 புதிய ஆம்புலன்ஸ்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. அவற்றில், 120 அதிநவீன ஆம்புலன்ஸ்களும் அடங்கும்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட, 2.50 லட்சம் பேர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக, 450 அவசர ஊர்திகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
108 அவசர ஊர்தியினை அழைத்தவுடன் தங்களின் ஆன்ட்ராய்டு போனில் வாகனம் எவ்வளவு துாரத்தில் வருகிறது என அறியும் வகையிலான செயலிகள் இந்த சேவையில் அமல்படுத்தப்பட உள்ளது.
சென்னையில், விபத்து நடந்த இடத்திற்கு ஆம்புலன்ஸ் செல்லும் நேரம் 11 நிமிடமாக இருந்தது, 10 நிமிடமாகவும், பின், 8.36 நிமிடமாக குறைக்கப்பட்டு, தற்போது, 8 நிமிடமாக அது செயல்படுகிறது. கிராமப்புறங்களில் ஆம்புலன்ஸ் செல்லும் நேரம் 14.5 நிமிடமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு, மூன்று வாரங்களாகின்றது. பொதுமக்கள், முகக்கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியை கடைபிடித்து அரசின் நோய் தடுப்பு அறிவுரைகளையும் பின்பற்ற வேண்டும்.
இந்தியாவில் எந்த மாநிலத்தில் இல்லாத வகையில், தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் தேவையான அனைத்து சுகாதார கட்டமைப்பு வசதிகளும், சி.டி ஸ்கேன், ஆக்ஸினேசன் வசதி, உயிர்காக்கும் மருந்துகளுடன் 15,000க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.