மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் தேசிய பெண் குழந்தைகள் தினமான ஜனவரி 24 அன்று பெண்களின் மேம்பாட்டிற்காகப் பாடுபட்ட 5 முதல் 18 வயதுக்குள்பட்ட தமிழ்நாட்டில் வசிக்கும் பெண் குழந்தைகளுக்கு மத்திய அரசால் மாநில அரசு விருது வழங்கப்பட உள்ளது.
இது குறித்து செய்திக் குறிப்பு ஒன்றை பெரம்பலூர் ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.
அதில், "பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவியவர்கள், பெண் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புக்கு ஏதேனும் வகையில் பணியாற்றியவர்கள், பெண் குழந்தைத் திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல் பணியில் ஈடுபட்டவர்கள், வேறு ஏதாவது வகையில் சிறப்பான அழகு தனித்துவமான சாதனைகள் செய்திருந்தவர்கள், பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள் மூட நம்பிக்கைகள் ஆகியவற்றை எடுத்து தீர்வு காண்பதற்கு ஓவியம் கவிதை, கட்டுரை மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்கள், ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பது போன்ற செயல்களைப் பெண்களாலும் சாதிக்க முடியும் என்றும் சாதித்தவர்கள்
இதுபோன்ற செயல்களில் சிறந்து விளங்கும் பெண் குழந்தைகளுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் மாநில அரசின் விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது.
இவ்விருதுடன் ஒரு லட்சத்திற்கான காசோலை பாராட்டுப் பத்திரம் வழங்கப்படும். விருதினைப் பெற உரிய முன்மொழிவுகளை முதன்மைக் கல்வி அலுவலர் மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர், காவல் துறை, குழந்தைகளுக்காகப் பணிபுரியும் சிறந்த தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
குழந்தைகள் பெயர், தாய், தந்தை, முகவரி, ஆதார் எண், புகைப்படம் ஆகியவற்றுடன் குழந்தைகள் செய்த வீர தீரச்செயல், சாதனைகள் குறித்து ஒரு பக்கத்திற்கு மிகாத குறிப்பு, ஆதாரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
இதனை வருகின்ற டிசம்பர் 25ஆம் தேதிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பெரம்பலூர் 62 12 12 12 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
பெறப்பட்ட விண்ணப்பங்களிலிருந்து தகுதியான விண்ணப்பங்கள் தேர்வுசெய்யப்பட்டு இவ்விருது அனுப்பப்படும். எனவே சாதனைபுரிந்த பெண் குழந்தைகள் இவ்விருதினைப் பெற விண்ணப்பிக்கலாம்" என பெரம்பலூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.