பெரம்பலூர்:பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதி தனியார் திருமண மஹாலில், நாம் தமிழர் கட்சி பெரம்பலூர், அரியலூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான் காவிரி நதி நீர் பங்கீடு குறித்த கேள்விக்கு, "காவிரி நீரை பங்கிட்டு தராத உனக்கு, காவிரி நீர் தராத, போராடாத காங்கிரஸ் கட்சிக்கு எதற்கு ஓட்டு போட வேண்டும் என்று மக்கள் நினைப்பார்கள். ஆகவே காங்கிரஸ் உடனான கூட்டணியில் இருந்து திமுகவால் விலகிட முடியுமா? குறைந்த பட்ச தன்மானம் திமுகவிற்கு உண்டா” என்று கேள்வி எழுப்பினர்.
நீட், கச்சதீவு, காவிரி நதி நீர் என ஒவ்வொன்றுக்கும் நீதிமன்றம் சென்றால் தான் பெற முடியும் என்றால்
சட்ட மன்றம், பாராளுமன்றம் எதற்கு. இந்த நாட்டை நிர்வகிப்பது மாண்புமிகு நீதியரசர்களா? மாண்புமிகு அமைச்சர்களா? முதலமைச்சரா? பிரதமரா? சட்டமன்றம் எதற்கு மேஜை தட்டுவதற்கா? பல்லாங்குழி, கிச்சு கிச்சு விளையாட்டு விளையாடுவதற்கா?
மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்று தருவதற்காகத் தானே சட்டமன்றமும், பாராளுமன்றமும். அதைவிடுத்து, எல்லாவற்றிற்கும் நீதிமன்றம் சென்று தான் தீர்வு காண வேண்டும் என்றால் சட்டமன்றமும், பாராளுமன்றமும் எதற்கு. கலைத்து விடலாமே. அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு ஆதரவாகத் தான் நீதிமன்றம் செயல்பட முடியும்” எனத் தெரிவித்தார்.