பெரம்பலூர்:தேனி போடிநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன். இவர் பிஇ தகவல் தொழில்நுட்பம் பொறியில் பட்டம் பெற்றுள்ளார். மேலும், பெங்களூருவிலுள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். கடந்தாண்டு கரோனா தொற்று காரணமாக நிறுவனம் மூடப்பட்டதால், இவர் தனது அறையில் இருந்து கொண்டே நூதன முறையில் பணம் சம்பாதிக்க முடிவு செய்துள்ளார்.
இதற்காக ஜெகன் போலியாக பல்வேறு முகநூல் பக்கங்களை உருவாக்கி அதன் மூலம் ஆண், பெண் என பலரிடம் நட்பை உருவாக்கியுள்ளார். இவரது முகநூல் நட்பு வட்டாரத்தில் சேலம் மாவட்டம் கே.மோரூர் கிராமத்தைச் சேர்ந்தவர ரினேஷ் என்பவரும் இணைந்துள்ளார். ரினேஷ் தற்போது பெரம்பலூரிலுள்ள தனியார் வேளாண்மை கல்லூரியில் இறுதியாண்டு பயின்று வருகிறார்.
நூதன முறையில் மோசடி
இதனைத்தொடர்ந்து பிரைவேட் சாட் மூலமாகவும், செல்ஃபோன் நம்பரை பெற்று அதன் மூலமாகவும், தான் வெளிநாட்டில் வேலை செய்து வருவதாகவும், விரைவில் சொந்த ஊருக்கு வரவுள்ளதால், வரும் போது, லேப்டாப், ஆப்பிள் ஐபோன் போன்றவற்றை எடுத்து வரவுள்ளதாகவும் ஜெகன் தனது முகநூல் நண்பர்களிடம் தெரிவித்துள்ளார்.
அதற்கு நண்பர்கள் பண உதவி செய்ய வேண்டும் என்றும் இந்தியா வந்தவுடன் விலை உயர்ந்த லேப்டாப், ஆப்பிள் ஐஃபோன் தருவதாகவும் கூறியுள்ளார். இதனை நம்பிய ரினேஷ், பெற்றோர், உறவினர்கள், நண்பர்களிடமும் கடனாக வாங்கி, அதனை பல்வேறு தவணைகளில் மொத்தமாக ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரூபாயை ஜெகன் கொடுத்த வங்கிக்கணக்கில் செலுத்தியுள்ளார்.