பெரம்பலூர்:பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(44) என்பவர், வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட வி.களத்தூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், ஆசிரியராக பணியாற்றி வந்தார். இதே பள்ளியில் வேப்பந்தட்டை கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் மனைவி தீபா(42)
என்பவர் கணித ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இருவரும் ஒரே பள்ளியில் பணியாற்றி வந்ததால், இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே தீபா உள்ளிட்ட பலரிடமும் நப்பிக்கையாக பேசிய வெங்கடேசன் பல லட்சம் ரூபாய் பணத்தை வாங்கி திருச்சியில் உள்ள தனியார் சிட்பண்டு நிறுவனத்தில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தன்னிடம் கொடுத்த பணத்தை பலரும் திருப்பி கேட்பதாக கூறி, தீபாவிடம் 19 லட்சம் பணம் பெற்றதாக கூறப்படுகிறது. இதனிடையயே கடந்த மாதம் நவ.15 ஆம் தேதி வழக்கம்போல் பள்ளிக்கு வேலைக்கு சென்ற தீபாவும் வெங்கடேசனும் வேலை நேரம் முடிந்ததும் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்களது இருவரையும் பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில், தீபாவை காணவில்லை என வி.களத்தூர் காவல் நிலையத்தில் அவரது கணவர் பாலமுருகன் புகார் அளித்தார். இதேபோல் வெங்கடேசனை காணவில்லை என அவரது மனைவி காயத்ரி பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இரு புகார்களின் பேரில் வழங்கு பதிவு செய்த போலீசார், 5 தனிப்படைகள் அமைத்து தீபாவையும், வெங்கடேசனையும் தேடி வந்தனர்.