தமிழ்நாடு முழுவதும் கரோனா பரவலைத் தடுக்க நான்காம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள போதிலும், நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதில், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 139 பேர் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டு, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் நேற்று முன்தினம்வரை சிகிச்சை பெற்று வந்தவர்களிலிருந்து 127 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதனிடையே பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையிலிருந்து மேலும் 5 பேர் குணமடைந்து தற்போது வீடு திரும்பியுள்ளனர்.
பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அனைவரும் தற்போது கரோனா தொற்றிலிருந்து மீண்டு பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், அம்மாவட்ட அரசு மருத்துவமனை கரோனா தொற்று இல்லாத மருத்துவமனையாக மாறியுள்ளது
மேலும், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த, குழந்தை பிரசவித்த 4 பெண்கள் உட்பட 6 பேர் திருச்சி அரசு மருத்துவமனையிலும், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் குழந்தை பிரசவித்த பெண் ஒருவரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் நல்ல முறையில் உடல் நலம் தேறிவரும் நிலையில், விரைவில் வீடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் பெரம்பலூர் மாவட்டம், விரைவில் கரோனா வைரஸ் தொற்று இல்லாத மாவட்டமாக மாறும் என சுகாதாரத் துறையினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க :செங்குணம் பெரிய ஏரியில் குடிமராமத்துப் பணிகள் தொடக்கம்