பெரம்பலூர் மாவட்டத்தில் சீத்தளி, வெண்பாவூர், வடகரை, அன்னமங்கலம், கீழ கணவாய், பாடாலூர், சித்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் உள்ளன. இந்த வனப்பகுதியில் மான், குரங்கு உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வாழ்ந்துவருகின்றன. இதனிடையே பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது பெரும்பாலான வனப்பகுதிகளில் தண்ணீர் இல்லாததாலும், அங்குள்ள தண்ணீர் தொட்டிகள் சீரமைக்கப்படாத காரணத்தினாலும் மான் உள்ளிட்ட வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு உணவு மற்றும் நீர் தேடி வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
வனப்பகுதிகளில் கூடுதலாகத் தண்ணீர் தொட்டிகளை அமைக்க ஆர்வலர்கள் கோரிக்கை
பெரம்பலூர்: வனப்பகுதிகளில் கூடுதலாக தண்ணீர் தொட்டிகளை அமைத்து வனவிலங்குகளின் உயிர் பலியை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடியிருப்புப் பகுதிகளுக்கு வரும் மான் உள்ளிட்ட விலங்குகள் சாலையை கடக்கும்போது வாகனங்களில் அடிபட்டு விலங்குகள் இறந்து விடுவதாகக் கூறப்படுகிறது. தற்போது கோடைகாலம் என்பதால் வனவிலங்குகள் அதிகளவில் தண்ணீர் தேவைக்காக குடியிருப்புகளுக்கு வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் வனப்பகுதிகளில் கூடுதலாக தண்ணீர் தொட்டிகள் அமைத்து கொடுக்கவும், சிதிலமடைந்த தண்ணீர் தொட்டிகளை சீரமைத்து அங்கு தண்ணீர் நிரப்பி வனவிலங்குகள் உயிர் பலியை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.