காவேரி குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக கூறி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கைது பெரம்பலூர் நகராட்சி 21வது வார்டு துறைமங்கலம் பகுதியில் சுமார் 1800 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்கள் தங்கள் பகுதியில் மாதத்திற்கு 1 முறை தான் காவேரி குடிநீர் விநியோகிக்கப்படுவதாகவும், அதுவும் பயன்படுத்த முடியாத அளவிற்குக் கழிவுநீர் கலந்து வருவதாகவும் புகார் தெரிவித்தனர்.
மேலும், இது தொடர்பாகப் பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக்கூறி அப்பகுதி மக்கள் இன்று (டிச.07) திடீரென குடிநீர் குடங்களுடன் பெரம்பலூர் - திருச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்த காவல்துறையும், நகராட்சி அதிகாரிகளும், மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது நகராட்சி உதவி செயற்பொறியாளர் மனோகரன் மற்றும் பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பலமுறை புகார் தெரிவித்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனப் பொதுமக்கள் உதவி செயற்பொறியாளரைச் சூழ்ந்து கொண்டு கேள்வி எழுப்பினர். ஒரு கட்டத்தில் உதவி செயற்பொறியாளரும் பொதுமக்களிடம் கோபமடைந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகும் பொதுமக்கள் கலைந்து செல்லாததால் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:ஆசிரியர்கள் மாயம்.. ரத்தக் கறையுடன் நின்ற கார்.. 5 பேர் கைது!