பெரம்பலூரில் ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணி கட்டுமானப் பணிகள் அமைச்சர் உதயநிதி ஆய்வு பெரம்பலூர் அருகே எறையூர் கிராமத்தில் 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 250 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டு வரும் சிப்காட் தொழில் பூங்காவில், ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்கா கட்டுமானப் பணிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சிப்காட் தொழில்பூங்காவின் ஓப்பந்தங்கள்:
காலணி மற்றும் தோல் பொருட்கள் உற்பத்திக்கான தனி கொள்கையை அரசாங்கம் வெளியிட்ட பிறகு, கடந்த ஆகஸ்ட் 23, 2022 அன்று கோத்தாரி ஃபீனிக்ஸ் நிறுவனத்துடன் ரூ.1,700 கோடி முதலீடு செய்யும் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. மொத்தமாக ரூ.2,440 கோடி முதலீட்டுக்கான 12 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் 29,500 பேருக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்யும் அடிப்படையில் கையெழுத்தானது.
தொடர்ந்து அமைச்சர் உதயநிதியிடம் பேசிய பீனிக்ஸ் கோத்தாரி நிறுவனத்தின் தலைவர் ரஃபீக் அகமது, "முதற்கட்டமாக இந்த தொழில் பூங்காவின் வாயிலாக எவ்வளவு பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும், மேலும், இங்கு தயாரிக்கப்படும் காலணிகளை சந்தைபடுத்துவது குறித்து விளக்கி கூறினார்.
குறிப்பாக, காலணி தயாரிப்பு பூங்காவில் தோல் அல்லாத மூலப்பொருட்களை கொண்டு காலணிகள் தயாரிப்பதால் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும், வேலைவாய்ப்பில் பெரும்பான்மை பெண்களுக்கு வாய்ப்பளிக்கப்படவுள்ளதோடு, பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாகவும் விளக்கமளித்தார்".
கட்டுமானப் பணிகள் 2023க்குள் முடிக்கப்பட்டு உடனே உற்பத்தி தொடங்கப்பட உள்ள நிலையில் முதற்கட்டமாக சுமார் 4 ஆயிரம் பேருக்கு பணிவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்தார். இந்த ஆய்வின் போது போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி கணேசன், அரசின் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலாளர் தாரேஷ் அகமது, மாவட்ட ஆட்சியர் கற்பகம் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
முன்னதாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 28.11.2022ல் பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் 243.49 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படவுள்ள சிப்காட் தொழில் பூங்காவினை திறந்து வைத்து, அதில் ரூபாய் 5000 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார்.
மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் புதியதொரு தொழிற்புரட்சியில் நமது அரசு ஈடுபட்டு பெரம்பலூரில் 50 ஆயிரம் பேருக்கு அதிலும் பெண்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கவுள்ள சிப்காட் தொழிற்பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினேன் எனத் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:"பரனூர் டோல்கேட் இனி பா.ஜ.க மாடல் டோல்கேட்" - விளாசிய மதுரை எம்.பி சு.வெங்கடேசன்!