பெரம்பலூர்: பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை நீக்கம் செய்யக் கோரி குடியரசுத் தலைவரை வலியுறுத்தி மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்த கையெழுத்து இயக்கத்தினை திமுக துணை பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா தொடங்கி வைத்தார்.
பின்னர் நிகழ்வில் பேசிய ஆ.ராசா, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலக வேண்டும் என கூறினார். தொடர்ந்து கையெழுத்து இயக்கத்திற்கு வருகை புரிந்தவர்கள் அனைவரும் கையெழுத்துப் போடுமாறு கேட்டு கொண்டார். இந்த கையெழுத்தானது அரசியலுக்காக மட்டுமல்ல மற்றும் ஆட்சி அதிகாரத்திற்கு மட்டுமல்ல எனவும் தெரிவித்தார்.
மேலும், “திராவிட சித்தாந்தம் இன்னும் 100 ஆண்டுகள் வாழ வேண்டும் என்றால் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒழிந்தே தீர வேண்டும் என்ற முடிவை தமிழ்நாடு மக்கள் எடுக்க வேண்டும் என்பதற்காக கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்தார். அப்போது அவர் பேசுகையில் தமிழரை பிரதமராக்குவோம் என்று சொன்னார். நம்முள் ஒரு தமிழன் இந்தியாவிற்கு பிரதமராக வந்தால் நல்லது” என்றார்.
இதனைத் தொடர்ந்து, நாங்கள் 2024இல் என்ன செய்ய போகிறோம் என்பதை தமிழ்நாடுதான் முடிவெடுக்கும். யார் பிரதமர் என்பதையும் நம்முடைய முதலமைச்சர்தான் முடிவெடுப்பார். ஒரு வேளை தமிழ்நாட்டில் இருந்து பிரதமர் வந்தால், அடுத்த நாள் ஆளுநர் மாளிகையில் ஆர்.என்.ரவிக்கு வழியனுப்பு விழா இருக்காது. தானாகவே ஆளுநர் ஒடக் கூடிய சூழலை ஆட்சி மாற்றத்திற்கு பிறகு உருவாக்குவோம். அதற்கு அடித்தளம்தான் இந்த கையெழுத்து இயக்கம்.