இளமை காக்கும் குமரி என்பது கற்றாழையின் சிறப்பு. aloe vera soap, aloe vera gel என்று சொன்னால்தான் பெரும்பான்மையானவர்களுக்கு தெரியவருகிறது. ஆனால் வேலியோர கற்றாழைக்கு பெரும்பான்மையினர் மதிப்பு கொடுப்பதில்லை.
இந்நிலையில், பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு கற்றாழை ஜூஸ் கடை அமைத்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறார் மணிகண்டன் என்னும் இளைஞர். இவர் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் மேலமாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது குடும்பத்தினர் கடந்த 20 ஆண்டுகளாக இயற்கை வைத்தியத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கற்றாழையை மலைப்பகுதிகளில் இருந்து எடுத்து வந்து அதனை சாறு பிழிந்து மரத்தில் செய்யப்பட்ட மத்தால் கடைந்து மோர் சிறிதளவு, உப்பு, மிளகு, மல்லி உள்ளிட்ட பொருட்களை கொண்டு குளிர்ச்சியான கற்றாழை ஜுஸை வாடிக்கையாளர்களுக்கு தருகிறார். உடல் சூடு, வயிற்று சம்பந்தப்பட்ட பிரச்னைகள்,குடல் சார்ந்த பிரச்னைகள் தீரவும் பெண்களுக்கு ஏற்படக் கூடிய மாதவிடாய் பிரச்னைகள் தீரவும் இந்த கற்றாழை ஜூஸ் பெருமளவில் உதவி செய்வதால் ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர்.
காலை 6 மணிக்கே கடையை தொடங்குவதால் நடைபயிற்சி மேற்கொள்வோர், குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் விரும்பி கற்றாழை ஜுஸை பருகி செல்கின்றனர். இதனால் கணிசமான வருவாய் வருவதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்த மணிகண்டன், மாவட்ட நிர்வாகம் பல பயிற்சிகளையும் உதவிகளையும் செய்து மூலிகைகள் உதவியுடன் பலருக்கும் தொழில் முனைவோராக மாற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கின்றார்.