பெரம்பலூர் மாவட்டத்தின் சிறுவாச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ரவி, ரஞ்சித், கார்த்திக், பவித்ரன். இவர்கள் தங்களது நண்பர்களுடன் சேர்ந்து கொட்டரை கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் மருதையாறு நீர்தேக்கத்தைப் பார்க்க ஆகஸ்ட் 6ஆம் தேதி சென்றனர்.
பார்க்கச் சென்ற நண்பர்களில் பவித்ரன், ரஞ்சித் இரண்டு பேரும் நீர்தேக்கத்தில் இறங்கி குளிக்கத் தொடங்க, சில மணி நேரத்தில் இருவரும் ஆழம் அதிகம் உள்ள பகுதியில் சிக்கிக் கொண்டனர். இவர்களைக் காப்பாற்ற மேலும் இரண்டு இளைஞர்கள் ஆற்றில் குதிக்க, அவர்களும் அதே ஆழத்தில் சிக்கி உயிருக்காகப் போராட வேண்டிய நிலை ஏற்பட்டது.
அந்த நேரத்தில் நீரில் சிக்கிய இளைஞர்கள் தங்களின் உயிரைக் காப்பாற்ற கூச்சலிட்டுள்ளனர். இதனை ஆற்றங்கரையோரம் துணி துவைத்துக் கொண்டிருந்த மூன்று பெண்கள் கேட்டவுடன் உடனடியாக இளைஞர்களைக் காப்பாற்ற செந்தமிழ்ச் செல்வி, ஆனந்தவல்லி, முத்தம்மாள் ஆகிய மூன்று பெண்கள் ஆற்றில் குதித்துள்ளனர்.
நீரில் சிக்கிய இளைஞர்களைக் கரைக்கு கொண்டு செல்ல தங்களது சேலையைப் பயன்படுத்தியுள்ளனர். முதலில் இரண்டு இளைஞர்களை மூன்று பெண்களும் காப்பாற்றினர். இதையடுத்து மீதமுள்ள இரு இளைஞர்களையும் காப்பாற்றுவதற்கு முன்னதாக, ரஞ்சித் மற்றும் பவித்ரன் இருவரும் உயிரிழந்தனர்.
இளைஞர்களைக் காப்பாற்றியது குறித்து, செந்தமிழ்ச்செல்வி, முத்தம்மாள், ஆனந்தவல்லி ஆகிய மூவரிடமும் பேசினோம். அப்போது அவர்கள் கூறுகையில், ''நான், ஆனந்தவல்லி, முத்தம்மாள் மூவரும் கரையில் துணி துவைத்துக்கொண்டிருந்தோம். அந்த நேரத்தில் 10 இளைஞர்கள் நீர்தேக்கத்திற்கு வந்தனர். ஆழமான பகுதியில் இளைஞர்கள் இறங்க முற்பட்டபோது, நாங்கள் எச்சரித்தோம். ஆனால் அதனை அவர்கள் காதில் வாங்கவில்லை.
ஆற்றாமையில் கண்ணீர் சிந்தும் வீரமங்கைகள்! நாங்கள் துணி துவைத்துவிட்டு கிளம்புகையில், இளைஞர்கள் கத்தும் சத்தம் கேட்டது. பதறியடித்து போய் பார்க்கையில், நான்கு இளைஞர்கள் கையை அசைத்து உதவிக்கு அழைத்தனர். அந்த நேரத்தில் நாங்கள் உடுத்திருந்த சேலையை உடனடியாக அவிழ்த்து இளைஞர்களை நீரிலிருந்து இழுக்க வீசினோம். முதலாவதாக இரண்டு இளைஞர்களை தூக்கிவிட்டோம். மூன்றாவதாக சேலையை வீசியபோது சேலையின் பிடியை இளைஞர் விட்டுவிட்டார். நாங்களும் நிதானம் இழந்துவிட்டோம்.
இளைஞர்கள் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இரண்டு பேரை மட்டும் தான் காப்பாற்ற முடிந்தது. எங்கள் பிள்ளையாக நினைத்துதான் இந்த செயலை செய்தோம். இன்று வரை அந்த இரண்டு இளைஞர்கள் எங்கள் கண்முன் உயிரிழந்தது நிழலாடுகின்றது. அதில் ஒருவர் பயிற்சி மருத்துவர் என்று தெரிந்தபோது, மனம் இன்னும் அந்த பதபதைப்பிலிருந்து மீள முடியவில்லை.
அவர்களைக் காப்பாற்றியிருந்தால் மனம் ஆறுதலாக இருந்திருக்கும். ஆழமான பகுதியில் மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடக்கக் கூடாது. அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.
தங்களது உயிரைப் பற்றி கவலைப்படாமல் நீரில் சிக்கிய இரு இளைஞர்களைக் காப்பாற்றிய மூன்று பெண்களுக்கும் கிராமத்தினர், அரசு அலுவலர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
வீர மங்கைகளின் இந்த செயல் தமிழ்நாடு முழுவதும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இளைஞர்களைக் காப்பாற்றிய வீரப் பெண்மணிகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பாக கல்பனா சாவ்லா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது ஆகஸ்ட் 15ஆம் தேதி சென்னையில் நடக்கவுள்ள சுதந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளது. விருதுக்கு பரிந்துரைத்த பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா, வீர மங்கைகள் மூவரையும் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:கிணற்றுக்குள் விழுந்த பசுமாடு... மீட்கப் போராடிய 2 பெண்கள்!