மனிதன் படைத்த கலைகளுள் மிகச் சிறந்தது சிற்பக்கலை. இந்த சிற்பக் கலை மனித நாகரிகத்தையும், வளர்ச்சியையும் வரலாற்றோடு எடுத்துரைத்துள்ளது. தமிழனின் அறிவுக்கூர்மையை வியக்க வைத்துள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே நம் தமிழர்கள் சிற்பக்கலையில் சிகரம் தொட்டுள்ளனர் என்று சொன்னால் மிகையாகாது. பல்லவர், சோழர், மற்றும் பாண்டிய மன்னர்கள் கால சிற்பங்கள் இன்றளவும் முன்னோடியாகத் திகழ்கிறது.
சிற்பக்கலை என்பது நமது அறிவுக்கூர்மையை சோதித்து பார்க்கும் கலைகளில் ஒன்று. சிற்பங்கள் வடிவமைப்பதில் பல வகைகளை சொல்லலாம். ஆனால் மரச்சிற்பங்கள் என்றென்றும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. மரச்சிற்பம் வீடு மற்றும் அரங்குகளையும் அழகுப்படுத்துகிறது. பல்வேறு வடிவங்களைக் கொண்ட மரச்சிற்ப சிலைகள் கலைப்பிரியர்களை அலாதி இன்பம் காணச்செய்பவை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சேலம் மாவட்டம் தம்மம்பட்டி, விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் ஆகிய ஊர்களில் அதிகமாக மரச்சிற்பங்கள் உருவாக்கப்படும் இடமாக இருக்கிறது.
வரலாற்றில் முக்கிய இடம் பிடித்திருப்பது தம்மம்பட்டிதான். இங்கு வடிவமைக்கப்படும் மரச்சிற்பங்கள் மிக தத்ரூபமாக நேர்த்தியாகவும் இருக்கிறது. இதேபோன்று அரும்பாவூர் மரச்சிற்பம் பலரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது. தம்மம்பட்டி, கள்ளக்குறிச்சி, அரும்பாவூர் ஆகிய ஊர்களில் வடிவமைக்கப்படும் மரச்சிற்பங்கள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இப்படிப்பட்ட தனிச்சிறப்பை பெற்றுள்ள மரச்சிற்பங்கள் வருங்கால இளைஞர்களிடத்திலும் தனிச்சிறப்பு பெற்றுள்ளதா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
தமிழ்நாடு அரசே சிற்பக்கலையை கற்றுத்தர முன்வந்தாலும் கற்கும் ஆர்வம் இளைஞர்களிடத்தில் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. அரும்பாவூர் கிராமத்தில் முன்பொரு காலத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த சிற்பக்கலை தொழிலை செய்து வந்துள்ளனர். காலப்போக்கில் இந்த சிற்பக் கலையை ஐந்து குடும்பம் மட்டுமே தலைமுறை தலைமுறையாக செய்து வருகின்றனர். இவர்கள் இந்த சிற்பக் கலையை அழியாமல் காத்து வருகின்றனர்.