விவசாயிகளுக்காக சொந்த செலவில் உழவர் சந்தை.. தனது சொந்த கிராமத்தை உயர்த்த துடிக்கும் வெளிநாட்டு வாழ் தொழிலதிபர்.. பெரம்பலூர்:பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி பேரூராட்சி சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில், வெளிநாட்டு வாழ் தொழிலதிபரான டத்தோ பிரகதீஸ் குமார் என்பவரின் முயற்சியால், ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை போலவே பிரமாண்டமாக பிளஸ் மேக்ஸ் என்ற பெயரில், உழவர் உற்பத்தியாளர் தினசரி காய்கறி சந்தை அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நடைபெற்றது.
பிளஸ் மேக்ஸ் நிறுவனர் பிரகதீஸ் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கற்பகம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஷ்யாம்ளாதேவி, சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், ஓய்வு பெற்ற டிஜிபி ரவி ஆகியோர் முன்னிலையில், தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு, பிளஸ் மேக்ஸ் உழவர் உற்பத்தியாளர் தினசரி காய்கறி சந்தையின் பெயர்ப் பலகையைத் திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து இந்த திட்டம் குறித்து பிரகதீஸ் குமார் பேசும்போது, "நானும் விவசாய குடும்பத்தில் பிறந்தவன்தான். நான் சிறு வயதில் பள்ளிக்குச் செல்லும்போது வயல் வேலைகளைப் பார்த்துள்ளேன். நான் வளர்ச்சி அடைந்தால் மட்டும் போதாது. என்னுடன் சேர்ந்து எனது கிராமமான பூலாம்பாடியும் வளர்ச்சி அடைய வேண்டும்.
சொந்த கிராமத்தின் விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்க ஏதாவது செய்ய வேண்டும். மேலும், அவர்களுக்கு நிரந்தர வருவாய் கிடைக்க என்ன செய்யலாம் என சிந்தித்தபோதுதான் ஒட்டன்சத்திரம் தலைவாசல் பகுதியில் உள்ள காய்கறி சந்தைபோல் பெரிய அளவில் காய்கறி சந்தை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று தோன்றி, பிளஸ் மேக்ஸ் நிறுவனத்தின் உழவர் உற்பத்தியாளர் தினசரி காய்கறி சந்தை உருவாக்கப்பட்டது. இந்த காய்கறி சந்தையால், பூலாம்பாடி பேரூராட்சி சுற்று வட்டாரப் பகுதி விவசாயிகளுக்கு நிரந்தர வருவாய் கிடைக்கும்.
அந்த வகையில், முதல் நாளில் 7 டன் காய்கறி விற்பனை ஆகியுள்ளது. சுமார் 300 ஏக்கரில் காய்கறி பயிரிடப்பட்டுள்ளது. இந்த காய்கறி சந்தைக்கு விற்க மற்றும் வாங்க வருபவர்கள், சந்தை வரி எதுவும் செலுத்தத் தேவையில்லை. அதை பிளஸ் மேக்ஸ் நிறுவனமே கட்டும். மேலும் இந்த சந்தையை ஒருங்கிணைத்திட 5 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் ப்ளஸ் மேக்ஸ் நிறுவனமே சம்பளம் வழங்கும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:விரைவில் 2,000க்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்கள்.. அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!