சென்னை:எறையூர் சிப்காட் தொழில் வளாகத்தில் அமைந்துள்ள ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணிப் பூங்காவில் 400 கோடி ரூபாய் முதலீட்டில் 4,000 பேர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் நிறுவப்பட்டுள்ள JR One காலணி உற்பத்தித் தொழிற்சாலையை, காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ.28) திறந்து வைத்தார்.
பின், நிகழ்ச்சியில் பேசிய அவர், “கடந்த ஆண்டு நவம்பர் மாதம்தான் பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் அமைக்கப்பட்டிருக்கின்ற சிப்காட் தொழில் பூங்காவைத் திறந்து வைத்து, ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்காவுக்கும் அடிக்கல் நாட்டினேன். சரியாக ஓராண்டு காலத்தில் துவக்க விழாவில் பேசுவதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி.
முதலீட்டாளர்களின் முதல் தேர்வு, தமிழ்நாடுதான். மாநிலத்தில் முதலீடுகளுக்கு சாதகமான சூழ்நிலை நிலவுவதுதான் இதற்கு முக்கியமான காரணம். இங்கே பிசினஸ் செய்வது எவ்வளவு எளிதாக இருக்கிறது என்பதும், முதலீட்டாளர்கள் பெரிதும் விரும்பும் மாநிலமாக தமிழ்நாடு எப்படி திகழ்கின்றது என்பதற்கும் இது கண்கூடான சாட்சி.
வளர்ச்சித் திட்டங்கள் என்பது, வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தோல் மற்றும் காலணித் துறைகளைப் பொறுத்தவரைக்கும், இந்த அரசுப் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது உங்களுக்கே நன்றாக தெரியும்.
கடந்த ஆண்டு தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை 2022-ஐ நான் வெளியிட்டேன். இந்த நடவடிக்கைகளுக்குப் பிறகு, இந்தத் துறையில் ஒரு பெரும் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது, நமக்கெல்லாம் கண்கூடாவேத் தெரிகிறது. இது மாதிரியான வளர்ச்சியைப் பார்க்கும்போது, 2030ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலம் என்ற நம்முடைய இலக்கை அடைகின்ற நாள் வெகு தொலைவில் இல்லை என்ற நம்பிக்கை எங்களுக்கு வளர்ந்து கொண்டே போகிறது.
இந்தத் துறையில், நம்முடைய தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை மேலும் வலுப்படுத்த வேண்டும். இன்னும் L360 பன்னாட்டு நிறுவனங்களை ஈர்த்திட வேண்டும் என்ற உந்துதல் காரணமாக, நமது அரசு பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.