தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 14, 2021, 8:41 PM IST

ETV Bharat / state

பெரம்பலூர் அருகே ஆதீண்டு கல் புதுப்பிப்பு!

பசுக்கள், பிற விலங்குகளுக்கு ஏற்படும் தினவை தீர்த்துக்கொள்ள உதவும் பழமையான ஆதீண்டு கல்லை இனாம் அகரம் கிராம மக்கள் புதுப்பித்துள்ளனர்.

ஆதீண்டு கல் புதுப்பிப்பு
ஆதீண்டு கல் புதுப்பிப்பு

பெரம்பலூர்:பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்திலுள்ள இனாம் அகரம் கிராமத்தில் உடைந்து போன ஆதீண்டு கல்லை அக்கிராம மக்கள் ஒன்றிணைந்து புதுப்பித்துள்ளனர்.

ஆதீண்டுகல்

தமிழ்முன்னோர்கள் தாங்கள் வளர்த்த கால்நடைகளை வெறும் விவசாய விலங்குகளாக மட்டும் வளர்க்க வில்லை என்பதற்கான சாட்சிகளில் ஒன்று ஆதீண்டுகல் ( ஆ+ தீண்டு+ கல்) எனப்படும் ஆதீண்டு குற்றி. ஆடு மாடுகளுக்கு ஏற்படும் தினவை (அரிப்பை) தீர்த்துக் கொள்ள அவை மரங்களில் சென்று தேய்ப்பது வழக்கம். அவ்வாறு கால்நடைகள் தேய்க்கும் போது அது மரத்தின் வளர்ச்சியை பாதிக்கும் என்பதை அறிந்த தமிழ் முன்னோர்கள் தினவெடுக்கும் மாடுகள் தேய்த்துக் கொள்வதற்காக, கல்தூண்கள், மரத்தூண்களை நட்டு வைத்தனர். இந்த கற்கள் ஆதீண்டு கல் என அழைக்கப்பட்டன.

பெரும்பாலும் மேய்ச்சல் நிலங்கள், நீர்நிலைகள் அருகிலேயே ஆதீண்டு கல்கள் நடப்பட்டன. கோயில்களுக்கு வழங்கப்பட்ட தானம் போல, ஆதீண்டு கல்களுக்கும் தானம் வழங்கப்பட்டன. இதனாலேயே தமிழர்கள் தங்களின் 32 அறங்களில், ஆதீண்டு கல் அமைப்பதையும் வலியுறுத்தினர்.

1920ஆம் ஆண்டு கல்

இனாம் அகரம் கிராமத்தில் உள்ள ஆதீண்டு கல், 1920ஆம் ஆண்டு நடப்பட்டது. இடையில் உடைந்து விழுந்த இந்த ஆதீண்டு கல்லை தற்போது, இனாம் அகரம் கிராம மக்கள் ஒன்றிணைந்து புதுப்பித்துள்ளனர். இந்த நிகழ்வில் அகரம் கிராமத்தைச் சேர்ந்த பெரியவர்கள், பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

புதுப்பிக்கப்பட்ட ஆதீண்டுகல்

சூழியல் அறிவும், கால்நடைகளுக்கான பரிவும் ஒன்றிணைந்த இந்த பழந்தமிழர் பண்பாடு, சங்க காலம் தொட்டே வழக்கத்தில் இருந்து வருகிறது.

இதையும் படிங்க: வேலூரில் ஆரவாரத்துடன் நடைபெற்ற எருதுவிடும் விழா!

ABOUT THE AUTHOR

...view details