பெரம்பலூர்:விவசாயத்தை முதன்மைத் தொழிலாகக் கொண்டது, பெரம்பலூர் மாவட்டம். இங்கு மழையை நம்பியே சாகுபடி செய்யப்படுகிறது. மக்காச்சோளம், சின்ன வெங்காயம், சிறு தானிய வகைகள் ஆகியவை இங்கு அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. தற்போது மாவட்டத்தில் இயற்கை வேளாண்மை செய்ய பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். மக்களின் இந்த மன மாற்றத்திற்கு ஒரு குடும்பம் முக்கிய காரணம் என்றால் நம்ப முடிகிறதா?
பெரம்பலூர் நகராட்சி பகுதிக்கு உட்பட்ட உப்போடை பகுதியைச் சேர்ந்தவர், ஆறுமுகம். இவர் லாரி ஓட்டுநராகவும், போர்வெல் வாகனத்தின் ஆப்ரேட்டராகவும் பணிபுரிந்து வந்தார். இதில் அவரது குடும்பத்திற்குத் தேவையான வருவாய் கிட்டினாலும், மனஅமைதி கிட்டவில்லை என்று கூறும் அவர், சில நாள்களில் தன்னுடைய தேடல் இயற்கை வேளாண்மையை நோக்கிச் சென்றது என்கிறார்.
எதிர்கால தலைமுறையினருக்கு நஞ்சில்லா உணவு வழங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன், மேலப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா என்பவர் துணையுடன் வேளாண்மைக்குள் நுழைந்த இவரை, இயற்கை வேளாண் ஆர்வம், நம்மாழ்வார் பக்கம் திருப்பியுள்ளது.
அவரது புத்தகங்களைப் படித்து, கிடைத்த அனுபவத்தின் மூலம் விவசாயி ஆறுமுகம், இயற்கை வேளாண் உழவராக மாறியதாக பெருமை கொள்கிறார்.
இவர் கடந்த 12 ஆண்டுகளாக, பெரம்பலூர் மட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதும் இயற்கை வேளாண்மை குறித்த ஆலோசனைகளை வழங்கி வருகிறார். அதுமட்டுமின்றி தற்போதுவரை 20 பாரம்பரிய நெல் ரகங்களையும், காய்கள், விதைகளையும் மீட்டுள்ளார்.