நாமக்கல்: தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. கடந்த மாதம் ஆன்லைன் ரம்மியில் மூன்று லட்ச ரூபாய் பணத்தை இழந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் ஆன்லைன் ரம்மியால் மற்றொரு உயிர் பலியாகியுள்ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த ரியாஸ் என்ற இளைஞர், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இன்று(பிப்.9) வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுச் சென்ற ரியாஸ், பாலத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு திடீரென காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இளைஞர் குதித்ததைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் மீனவர்கள் உதவியுடன் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். ரியாஸ் ஆற்றில் குதித்ததை அறிந்து அங்கு வந்த அவரது தாயார் கதறி அழுதது காண்போரை கண் கலங்க செய்தது.