நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் இன்னமும்கூட அரிக்கேன் விளக்கு ஒளியில் குழந்தைகள் பயின்றுவருகின்றனர். ஓலைகளால் வேயப்பட்ட கூரை வீடுகள்தான் அங்கு பிரதானம். தெருவிளக்கு, குடிநீர், கழிப்பறை என அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லாமல் கடந்த 12 வருடங்களாக இந்தப் பகுதியினர் சிரமப்பட்டுவருகின்றனர். நாமக்கல் மாவட்டம் ராசிப்பாளையம் ஊராட்சியிலுள்ள தெற்கு சீத்தப்பட்டி பகுதிதான் அது.
நாமக்கல் மாவட்டம் ராசிப்பாளையம் அருகே உப்பாத்துபாலம் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவந்தனர். இந்த பகுதி நீர்வழிப்பாதை புறம்போக்கு என்பதால் இங்கு வசித்தவர்கள், தெற்கு சீத்தப்பட்டி பகுதியில் வருவாய் துறைக்கு சொந்தமான அரசு புறம்போக்கு நிலத்தில் குடியமர்த்தப்பட்டனர்.
இங்கு அவரவர் வசதிக்கு தகுந்தாற்போல வீடு கட்டி சுமாராக 12 ஆண்டுகள் நாள்கள் கடந்துவிட்டன. ஆனால் இன்னும்கூட இந்த பகுதிக்கு மின்சாரம் கிடைக்கவில்லை. நவீன யுகமான இன்றைய காலகட்டத்தில், இன்னமும் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில்தான் இரவு பொழுதைக் கழித்துவருகின்றனர், இப்பகுதியினர்.
’தெருவிளக்குக்கூட இல்லாத இந்த மயானத்தில், இரவில் எங்களை விஷ ஜந்துக்கள் தாக்கினால் என்ன செய்வோம்’ என அடிப்படை வசதிகளுக்காக ஆவேசப்படுகிறார், கவிதா. அவர் கூறுகையில், “2008ஆம் ஆண்டு இவ்விடத்திற்கு வரும்போது அரசு சார்பில் அனைத்து வசதிகளும் செய்துதருவதாக உறுதி அளித்தனர். ஆனால் இப்போதும் என் பையன் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில்தான் படிக்கிறான். இதனால் அவனுடைய கண்ணில் பார்வைத்திறன் குறைபாடு ஏற்பட்டுள்ளது.
இரவு நேரங்களில் வெளியில் வரவே அச்சமாக இருக்கிறது. வயதானவர்கள் இந்த கும்மிருட்டுக்குள் நடமாட முடியுமா? வாக்காளர் அட்டைகளைக் கொடுக்கும் அரசாங்கத்தால் பட்டா கொடுக்க முடியவில்லை. நாங்களும் மனு கொடுக்காத அலுவலர்கள் கிடையாது” என 12 வருடங்களாக தனது மனதை அரித்துக் கொண்டிருக்கும் ரணங்களை வெளிப்படுத்துகிறார், கவிதா.