நாமக்கல்: ஆன்லைன் அபராதம், வாகன உதிரிபாகங்கள் விலை உயர்வு போன்ற காரணங்களால் லாரி தொழில் நலிவடைந்து வரும் நிலையில் தற்போது காலாண்டு வரியை 40 சதவீதம் வரை உயர்த்தி தமிழக அரசு அண்மையில் அரசாணை வெளியிட்டுள்ளது. இதனை எதிர்த்து லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் இன்று (09.11.23) ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக சம்மேளனத்தின் தலைவர் தன்ராஜ் அறிவித்தார். இந்த போராட்டத்தின் 3 அம்ச கோரிக்கையாகக் காலாண்டு வரி உயர்வை ரத்து செய்தல், ஆன்லைன் வழக்கு விதிப்பதை ரத்த செய்ய வேண்டும் மற்றும் அரசு மணல் குவாரிகளை உடனடியாக திறக்க வேண்டும் என லாரி உரிமையாளர் சங்கத்தினர் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளனர்.
இன்று நடைபெறும் போராட்டத்திற்குத் தென் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், அகில இந்திய மோட்டார் காங்கிரஸ், தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், மணல் லாரி உரிமையாளர்கள், வாடகை வாகனங்கள் உரிமையாளர்கள் சங்கம், லாரி பாடி பில்டிங் உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆதரவு அளித்துள்ளனர்.