இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 560 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 48 சுங்கச்சாவடிகள் செயல்படுகின்றன. இதில் ஆண்டுதோறும் சுழற்சி முறையில் ஏப்ரல், செப்டம்பர் மாதங்களில் தனித்தனியாக 5 முதல் 10 விழுக்காடு வரை கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது.
அதன்படி 2020ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள 48இல் 27 சுங்கச் சாவடிகளில் ஏப்ரல் மாதம் ஐந்து முதல் 10 விழுக்காடு வரை கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், இன்று (செப். 1) முதல் மேலும் 21 சுங்கச் சாவடிகளில் ஐந்து முதல் 10 விழுக்காடு வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் 21 சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு சுங்கச் கட்டணத்தை உயர்த்துவதால், சரக்கு வாகனங்களின் கட்டணமும் உயர்த்தப்படுகிறது. இதனால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலை உயரும் நிலை உருவாகியுள்ளது. ஒருபுறம் மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கில் தளர்வு அறிவித்து வருகின்றன. மறுபுறம் சுங்கக் கட்டணம் உயர்ந்து வருகிறது.
ஏற்கனவே கரோனா ஊரடங்கு காரணமாக லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொருளாதார நெருக்கடிக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனிடையே சுங்க கட்டணமும் உயர்ந்துள்ளதால் லாரி உரிமையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
"கரோனா பாதிப்பால் லாரிகளுக்கு போதிய லோடுகள் கிடைக்காமல் உள்ளது. சுங்க கட்டணம் உயர்வு என்பது லாரி தொழிலை மேலும் நசுக்கும். லாரி உரிமையாளர்களுக்கு கிடைக்கும் சொற்ப வருமானமும் இனி கிடைக்காது. இதனால் விலைவாசி உயர்வு ஏற்பட்டு, பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே சுங்க கட்டணத்தை கரோனா காலத்தில் ரத்து செய்ய வேண்டும்" என்கிறார் நாமக்கல்லை சேர்ந்த லாரி ஓட்டுநர் ராஜசேகர்.
இது குறித்து நாமக்கல் டவுன் லாரி உரிமையாளர் சங்க தலைவர் நல்லதம்பி கூறுகையில் "கரோனா காலத்தில் டீசல் விலை, வாகன உதிரிபாகங்கள் விலை, காலாண்டு வரி, இன்சூரன்ஸ் கட்டணம் ஆகியவை உயர்ந்துள்ளன. தொழிற்சாலைகள் இயங்காத நிலையில் போதிய லோடுகள் லாரி உரிமையாளர்களுக்கு கிடைப்பதில்லை. இப்படி இருக்கும் போது சுங்க கட்டணம் உயர்வு லாரி உரிமையாளர்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தும். எனவே மத்திய அரசு சுங்க கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: ஆடை வடிவமைப்பில் அசத்தும் பட்டதாரி இளம்பெண்!